சனி, 8 ஆகஸ்ட், 2015

மூவர் கோவில், கொடும்பாளூர்

கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில்  என்று அழைக்கப்படும் கோவிலுக்கு  சனிக்கிழமை  சென்று வந்தோம்.  சோழர் காலத்து கோவில்.  என் கணவர் அவர்கள் பி.ஏ இந்தியப்பண்பாடு படிக்கும்போது இந்த கோவிலைப்பற்றிப் பாடம் வந்ததாம். வெகு காலமாய் போகவேண்டும் என்று நினைத்த இடம் . போன வாரம்  1ம் தேதி சனிக்கிழமை போய் வந்தோம்.

இந்த ஊருக்கு திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலை கடந்து சென்று இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.   ஒரு கடையில் நின்றவரிடம் கொடும்பாளூர் எப்படிப் போக வேண்டும் என்று கேட்டவுடன் கடையில் நின்ற வயதானவர் மூவர் கோவிலா? என்று கேட்டார்.  அப்புறம் வழி சொன்னார். அப்புறம் ஒரு இளைஞர் ஐவர் கோவிலா என்று கேட்டார் அப்படி பேர் இருக்கு போல!  அந்த வழியாகத்தான் போகிறேன் வாருங்கள் என்று எங்கள் காருக்கு முன் டூவீலரில் போய் வழி காட்டினார். மெயின் ரோட்டிலிருந்து  கோவில்  போகும்  சாலை பிரியும் போது விடைபெற்று சென்றார். 


கோவிலுக்கு செல்லும் சாலை ஒற்றையடி பாதை போல் இருக்கிறது குண்டும், குழியுமாய் இரண்டு பக்கமும் வயலும், திடலுமாய் இருக்கிறது. ஓ! என்று ஆளரவம் இல்லாமல்.
                  

கோவில் தொல்லியல்துறை பொறுப்பில் உள்ளது. பார்த்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார்.  அங்குள்ள வேப்பமரத்திலிருந்து விழும் கொட்டைகளை வயதான அம்மா குனிந்து சேகரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் போய்விட்டார்கள். நாங்கள் இருவர் மட்டும் தான் அந்த கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தோம்.  நிறைய பேராக போனால் நன்றாக இருக்கும் இந்த கோவிலுக்கு.

மூன்று கோவில்களில் சிவலிங்கங்கள் இருந்து இருக்கின்றன. இப்போது இரண்டு கோவில்கள் இருக்கின்றன, அதில் ஒரு கோவிலுக்குள் மட்டும் சிவலிங்கம் நல்ல உயரமாய் இருக்கிறது. இன்னொன்றில்  வேண்டாதபொருட்களைப் போட்டுப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

                    

இந்த மூவர் கோயில் வரலாறு பின் வருகிறது.  அந்த  பலகையில் உள்ளது போல் சிறப்புடன் முன்பு இருந்து இருக்கிறது. இப்போது எல்லாம் சிதிலமடைந்து காலத்தின் சாட்சியாக நிற்கிறது. கலையம்சம் நிறைந்த  சிற்பங்கள் உடைந்து அங்கு பல இடங்களில் சிதறி கிடக்கிறது.







கிணறு அழகாய் இருக்கிறது, படிகள் நிறைய போய் முடியும் இடத்தில் ட வடிவில்  பிரிந்து போகிறது. வட்டமாய் ஒரு கிணறு இருக்கிறது. அதை போட்டோ எடுக்க செருப்பை கழற்றிவிட்டு மேலே ஏறினேன் அவ்வளவுதான் ஒட்டுமுட்கள் பாதம் முழுவதும் குத்தி அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் போய் விட்டது. என் கணவர் செருப்பை தூக்கி போட்டார்கள் அதன் பின் முட்களை அகற்றி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு கிணற்றை படம் எடுத்தேன். மறக்க முடியாத நல்ல அனுபவம். 



















                                                    யாளியின் வாய்க்குள் மனித உருவம்
யாளிக்கு வெளியேயும், யாளியின் வாய்க்குள்ளேயும்  மனிதன் சண்டை போடுகிறான்.



             யானையும் யாளியும், யாளியின் நகங்கள் எவ்வளவு கூர்மை?


                                                                          கல்வெட்டு.

விடுமுறை இருக்கும் போது இது போன்ற கலைச்சிற்பங்கள்  உள்ள இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரலாம்.
                                                                  வாழ்க வளமுடன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இடங்கழி நாயனார் கோவில்

                      

                    
நாங்கள் சென்றவாரம் சனிக்கிழமை கொடும்பாளூரிலே உள்ள இடங்கழிநாயனார் கோவில் சென்று இருந்தோம். நல்ல அமைதியான  இடம், மரங்கள் சூழ்ந்து  பறவைகளின் பலதர்ப்பட்டஓசை நிறைந்த இடமாய் இருந்தது.

ஆடு மேய்க்கும் ஒரு அம்மா, நந்தியெம்பெருமானை சுற்றி வணங்கி கொண்டு இருந்த ஒருவர், விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள், மற்றும்  நாங்கள் இருவர்  மட்டுமே அந்த வளாகத்தில்.

இடங்கழிநாயனார் வரலாறு:-

கொடும்பாளூரிலே வேளிர் குலத்தில் பிறந்த மன்னர்  இடங்கழியார். அவர் ஆட்சியில் சைவம் தழைத்தோங்கியது.திருக்கோவில்களில் பூஜை சிறப்பாக நடந்தது.

அவ் ஊரில் ஒரு சிவனடியார்  இருந்தார் அவர் நாள்தோறும் அடியார்களுக்கு மாகேசுரபூஜை(அமுதுபடைத்தல்)செய்வதை நித்திய கடனாய் செய்து வந்தார்.  அப்படி செய்து வரும் போது அவருக்குப்  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அச்செயலைத் தொடரமுடியவில்லை அன்று இரவே   இடங்கழியாருடைய மாளிகைக்குச் சென்று , நெற்குதிரில் இருந்த நெல்லை எடுத்து வந்தார். அப்போது காவலர்கள் அவரைக் கைது செய்து மன்னர் இடங்கழியார் முன் நிறுத்தினர், ஏன் திருடினீர் ? என்று  அரசர்  சிவனடியாரைப் பார்த்து கேட்ட போது, அடியார்களுக்கு  நாள் தோறும் அமுதுசெய்வித்து வந்தேன். பணத்தட்டுப்பாட்டால்  செய்யமுடியவில்லை ,  அந்த செயல் தடை படக்கூடாது என்று திருடினேன் என்றார் சிவனடியார்  , இதைக் கேட்டவுடன் மனமிரங்கி  நெற்களஞ்சியத்தை திறந்து அனைத்தையும் எடுத்து கொள்ளச் சொன்னார், மன்னர். பொருள் உதவிகளும் செய்தார்.  நீண்டகாலம் நல்லாட்சி செய்து சிவனடி சேர்ந்தார் அரசர். இடங்கழிநாயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.


                      
எங்கு நிதி பெற்று கோவில் கட்டப்பட்டது என்ற விபரம்


இடங்கழிநாயனார் பற்றிய பெரியபுராண பாடல்கள் அடங்கிய கல்வெட்டுக்கள்.


நல்ல உயரம் நந்தி, சுற்றி வரும் பக்தரை விட உயரம் தானே!
நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்



அன்னதான மண்டபமாய் இருந்திருக்கலாம்,  இப்போது உபயோகத்தில் இல்லை போலும் இந்த வீட்டைச்சுற்றி புதர்மண்டி கிடந்தது.

இடங்கழி நாயனார் கோவிலின் பக்கம் இந்த  சத்திரம் போன்ற வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 


அங்கு மண்டி போய் இருந்த  புதர்ச்செடி ,கொடிகளை விலக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் நல்ல வெயில் ஒவ்வொருவர் கையிலும், கம்பு, செங்கல் இருந்தது. என்ன தேடுகிறீர்கள் ? புதர்களுக்கு இடையில் என்று கேட்டால் அடித்த ஓணானை என்று பெருமையாக காட்டுகிறார்கள்.அய்யோ ! பாவம் அடிக்கலாமா? என்றால் இது கெட்டது அடிக்கலாம் என்கிறார்கள் வீட்டில் திட்ட மாட்டார்களா? என்று கேட்டால் அவர்கள் வேலைக்கு போய் இருக்கிறார்கள் வீட்டில் யாரும் இல்லை, அவர்களுக்கு தெரியாது ஆன்ட்டி என்றார்கள். சனிக்கிழமை என்பதால் இவர்களுக்கு விடுமுறை.

இளங்கன்று பயம் தெரியாது என்பதை உறுதி படுத்துவது போல்  இருந்ததுஅவர்கள் செயல்.ஏரிக்கரை, புதர்கள் ஆலமரத்தின் விழுதுகளில் ஆட்டம், என்று இருந்தது.

நம் குழந்தைகளை வெயிலில் போகாதே, அங்கே, போகாதே, இங்கே போகாதே என்று வளர்க்கிறோம், இவர்கள் வெயிலோடு விளையாடி, மகிழ்ச்சியாக ஆரோக்கியமாய் இருக்கிறார்கள்.

ஆன்ட்டி வருகிறீர்களா? அங்கு ஒரு குகை இருக்கு, பெருமாள் கோவில் இருக்கிறது என்றார்கள் என் கண்வர் வேண்டாம் இன்னொரு முறை பார்ப்போம், நேரம் ஆகி விட்டது என்றார்கள்.

அந்தக் காலத்தில் ஓணானை அடித்தால் காசு கிடைக்கும் என்பார்கள் நம்ப மாட்டேன்.
நாங்கள் காரில் ஏறும் போது இந்த சிறுவர்கள் காசு கொடுங்க ஆன்டி ஏதாவது வாங்கி
 சாப்பிடுகிறோம் என்று கேட்டார்கள் நாங்கள் கொடுத்தோம் அந்தக் காலத்தில் சொன்னது போல் ஓணானை அடித்த்வுடன் காசு கிடைத்து விட்டதோ என்று நினைப்பு வராமல் இல்லை.

இவர்கள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் நண்பர்களுடன் சிறுவயதில் ஆடி களித்த நாட்களை சொல்லி மகிழவார்கள். அவர்களை ஒற்றுமையாய் இணை பிரியாமல் இருக்க வாழ்த்தி வந்தோம்.

                                                       வாழ்க வளமுடன்!