புதன், 13 ஆகஸ்ட், 2014

கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா

இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை  உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய நீர்நிலைகளையும்  வணங்கினர். இப்போது நீர்வளங்களைத் தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.  அதனால்  ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா  ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.    ஆடிப்பெருக்கு விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் பார்த்து எழுதிய பதிவு இது.

கொள்ளிடக்கரையில் (வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழாவைப்  பார்க்க போனோம். கொள்ளிடம் பாலம் விழா கோலம் பூண்டு இருந்தது. தென்னை ஓலை, குறுத்தோலை, கலர் பேப்பர்களால் அலங்காரம் என்று  பாலம், கார்கள், பஸ்கள், வேன்கள் என ஜே ஜே என்று  இருந்தது.


கொள்ளிடக்கரை போகும் வழி எல்லாம் கடைகள்  இருந்தன,
ஆற்றுக்குப் போகும் பாதையில் வரவேற்புக்கு வாழைமரத்தோரண வாயில்
குழந்தைகளுக்குப் பலூன் 
ஆலமரத்தின் நிழலில் குடைராட்டினம் 

பலூன், ஐஸ்கிரீம், பழங்கள் , (வரலக்ஷ்மி பூஜைக்கு) முறம் விற்பவர்கள்.
எங்கும் குதூகலம்! கோலாகலம்!
பூஜைப் பொருட்கள், கறுப்பு, சிவப்புக்கயிறுகள்  விற்பனை
மாங்காய், தேங்காய்  பட்டாணி சுண்டல் , கொண்டைக்கடலை சுண்டல்
அழகிய  பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், பூத்தட்டு ,சின்ன உரல்  என்று விற்பனைப் பொருட்கள்
குல்பி ஐஸ்
போகும் வழி எங்கும் வேப்பமரம்- சித்ரான்னங்களை அங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்
பஞ்சுமிட்டாய்  
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.
எல்லோரும் மங்கலமாக இருக்கவும், ஊர் செழிக்கவும் மழை வேண்டியும் வேண்டிக் கொண்டோம்.
ஆற்று மண் எடுத்து காவேரி அம்மனாக பிடித்து வைத்து  காப்பரிசி, மாவிளக்கு, கனிவகைகள், காதோலை, கருவளையல், மஞ்சள் கயிறு, பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வழிபட்டபின் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்கிறார்கள்.
படைத்து  ஆற்றில் விட்ட காசு  போன்ற பொருட்களை எடுக்கும் சிறுவர்கள் 
தூரத்தில் கொள்ளிடம் ரயில் பாலம்

இன்னொரு புறம் -கொள்ளிடம்    சாலைப்போக்குவரத்துப்  பாலம்

புனிதநீராடும் பக்தர்கள், 

அந்தக்காலத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும் . மரங்கள் செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கும்.  சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்வார்கள் . ஆற்றில், அருவியில் குளித்தால் நல்ல பசி எடுக்கும் . அப்போது கொண்டுவந்திருக்கும் கட்டுசாதம், சித்ரான்னங்களை குடும்பத்துடனும் நட்புகளுடனும் சாப்பிட்டுக் களித்து இருப்பர். ஆடி மாதம் நல்ல காற்று வீசி உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும்.  

 ஆனால் இப்போது மரங்கள் குறைந்து மழை குறைந்து வளம் குன்றிக் காணப்படுகிறது.  ”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்பார்கள். இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரங்களும் அசையவேமாட்டேன் என்கிறது . ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று வேகமாய் வீசும் என்பார்கள்.மீண்டும் அந்தக்காலம் வரவேண்டும். ஆறுகள் நிறைய வேண்டும்.

ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு  வளப்படுத்த வேண்டும்.

’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும்  ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-

 ‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”

“குளங்கள், கிணறுகள், ஆறுகள்  முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் . 

“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’

கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல்  போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்

இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..

அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக் இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.  இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.

ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது.  ஆடி பெருக்குவிழாவை  மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்! 
வாழ்க வளமுடன்!
-------------------

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் !
-------------------------

புதன், 6 ஆகஸ்ட், 2014

வீரநாராயண ஏரியும் பறவைகளும்

ஆடிப்பெருக்குக்கு நாங்கள் வீரநாராயணபுர ஏரிக்குச் சென்றோம்.அங்கு  செல்ல கொள்ளிட ஆற்றின் தெற்கு ”லைன் கரை” வழியாக சென்றபோது இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம். இருபுறமும் அழகான மரம்,செடிகொடிகள்  இருந்தன.  கீழே இறங்கிப்  படம் எடுக்க முடியாது. பாதை மிகவும் குறுகலாக இருந்தது. பாதையின் ஒருபுறம் கொள்ளிடம்; இன்னொரு புறம் கொள்ளிட வாய்க்கால். எதிரில்  வேறு வாகனம் வந்தால் ஒதுங்க இடம் கிடையாது. 15கி.மீ தூரத்திற்கு அணைக்கரை வரை இப்படியாக பாதை இருந்தது.   
                     ஒருபுறம் கொள்ளிடம் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது.
                                                       மறுபுறம் கொள்ளிடம் 



 அப்படி இந்த பாதையில் போகும் போது என் கணவர், "அந்த பனைமரத்தை பார் !" என்றார்கள் பார்த்தால் அழகாய் தூக்கணாங்குருவி கூடு நிறைய தொங்கிக் கொண்டு இருந்தது. "கொஞ்சம் நிறுத்துங்களேன், கொஞ்சம் போட்டோ எடுத்துக் கொள்கிறேன்" என்றேன். "சீக்கிரம் எடு! கீழே இறங்காமல்.  எதிரில் வண்டி வருமுன் இந்த பாதையை கடக்க வேண்டும்" என்று அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவசரம் அவசரமாய் போட்டோ எடுத்தேன். காற்றில் கூடுகள் பறந்து கொண்டே (ஊஞ்சல் ஆடுவது போல்) இருந்தது. போட்டோ எடுப்பது சிரமமாய் இருந்தது. குருவியும்  இந்த மரத்தில் இருந்தால் என்று நினைக்கும் போது ஒரு குருவி கூட்டிலிருந்து வேகமாய் பறந்து வந்து பனைமரத்தின் உச்சிக் கிளையில் நுனியில் அமர்ந்தது. அதுவும் காற்றில் ஊஞ்சல்  ஆடியது.


இந்தபடத்தில் முதலில் இருக்கும்கூடு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தகூடு ஒரு அறை முடிந்து இருக்கிறது , அடுத்தகூடு இரண்டாவது அறைகட்டிக் கொண்டு இருக்கிறது.

பச்சைப்புற்களால் கட்டிய கூடு - இரண்டு வாசல் போல் இரண்டு துவாரம் இருக்கிறது பாருங்கள்.    அறைகள் வைத்து கட்டுகிறது போலும் தோற்றத்தை கொடுத்தாலும் ஒரு அறையில் முட்டையும் மற்றொரு அறை கூட்டுக்குள் போகும் பாதை.என்ன அழகாய் கட்டிக் கொண்டு இருக்கிறது! கடைசியில் நீண்ட குழாய் போன்ற அமைப்புடன் முடிகிறது கூட்டின் வாயில், பிற உயிரினங்களிடமிருந்து தன் குஞ்சை காப்பாற்ற அதற்கு அறிவை கொடுத்து இருக்கிறார் கடவுள். எதிரிகளை கண்டு அச்சம் அடைவதால் அவை கூட்டமாக அருகருகே  கூடுகள் கட்டிக் கொண்டு வாழுமாம்.

காய்ந்த கூடு மஞ்சளாக இருக்கிறது.  பனைமரத்தில் காய்க்காத மரம் பார்த்துக் கூடு கட்டும் போல இருக்கிறது.  இதில் காய்களே இல்லை.  மரத்தைப் பின்னிப் படர்ந்து இருக்கிறது ஒரு கொடி.

                               
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மூங்கில் மரத்திலும் தூக்கணாங்குருவிக் கூடு இருந்தது . கார் போய்க் கொண்டு இருக்கும் போது எடுத்தது . காற்றில் ஆடுகிறது மரம்.
                                            
முக்குளிப்பான் என்று சொல்லப்படும் பறவை முக்குளிக்கும் அழகை பாருங்கள். வீராணம் ஏரியில்.
வீரநாராயண ஏரியில் நீரின் அலைகள்   கடல்அலைகள் போல்  கரையில் வந்து மோதும் காட்சி,  -பறவைகளின் கூட்டம்.
                                          முக்குளிப்பான் பறவைகள்


எல்லோரும் சேர்ந்து செல்லும்போது நீ மட்டும் ஏன் தனியா போறே கண்ணம்மா ?

நாரையும் தன் கூட்டத்தை விட்டு வந்த காரணம் கேட்கப் போனாயா கண்ணம்மா? 
நாரைகள் அங்குள்ள மரங்களிலும் புற்களிலும் ஆற்றிலும் நிறைய அமர்ந்து இருந்தன.
அணைக்கரை செல்லும் சாலையில் வித்தியாசமான பறவை எதையோ கொத்திக் கொண்டு இருந்தது , கொஞ்சம் சிறு கோழிக் குஞ்சு போல் இருந்தது . என்ன பறவை என்று  இணையத்தில் கூகுளாரிடம் கேட்டால் அது," தாமிரக் கோழி என்ற பறவை. நீர் நிலைகளில் இருக்கும்." என்று சொல்லியது.  எப்படியோ கோழி மாதிரி இருக்கு  என்று சரியாக யோசித்து இருக்கோம் இருவரும்.  தாமிரக் கோழி நீர்நிலையை விட்டு சாலைக்கு வந்து ஏதோ சாப்பிட்டது.  பின் எங்கள் கார் சத்தம் கேட்டு குடு குடு என்று ஓடிப் புதர்களில் மறைந்து விட்டது .
ஆட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி
மாட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி. ஆடும், மாடும் முகம் காட்டவில்லை என்று நினைக்கிறீகளா? நீ இந்த பதிவில் பறவைகள்  மட்டும்தான் போடுகிறாய் நாங்கள் என்னத்துக்கு என்று சொல்லிவிட்டன.

ஆடும் மாடும் காரில் போகும் போது கார் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்டது  கீழே குனிந்து மேய்ந்து கொண்டு இருக்கின்றன.அதனால் முகம் தெரியவில்லை.

ரசித்தீர்களா?-வீரநாராயண ஏரிக்குச் செல்லும் பாதையில் உள்ள பறவைகளை.

 'கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு விழா'- அடுத்தபதிவில்.
                                            
                                                                  வாழ்க வளமுடன்.
                                                                            -------------



திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.

ஆடித்திருநாள்  நாளை  ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா? ( என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கவலைப்பட்டது போலவே மயிலாடுதுறைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆடி மாதத்தில் காவேரி அன்னையை வணங்க முடியவில்லையே! என்று வருந்திக்கொண்டு  இருந்தவர்களுக்கு. காவேரி முழுக்குத் துறையில் செயற்கைக் குட்டை செய்து அதில் மக்கள் விழா கொண்டாடினார்கள் என்று செய்தியில் சொன்னார்கள்.
 நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.


எங்கள் ஊர் காவேரி,- தண்ணீர் இல்லை- தண்ணீர் வரவை எதிர்பார்த்து நிற்கிறது இரு கரையும்.

மாரியம்மன் கோவில் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து அங்குள்ள அடிகுழாயில் தீர்த்தம்   எடுக்க வந்திருக்கிறார்கள். காவேரியில் நீர் இருந்தால் அதில் எடுத்துச்சென்றிருப்பார்கள்..

திரு இந்தளூர் பெருமாள் வந்து திருமஞ்சனம் ஆடும் மண்டபம்.
ஆடிப்பெருக்கிற்கு ஆற்றிற்கு செல்ல  சிறு தேர் செய்யும் சிறுவர்கள்.
கொள்ளிடத்தில் நீர் வரப்போவதால் அதைத் தூர்வாருகிறார்கள்.
அணக்கரை செல்லும் வழியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது
காடுமாதிரி புதர் மண்டிவிட்டதால்  இயந்திரம்தான் விரைவாகச் சுத்தம் செய்யும், மனிதனை விட

அணைக்கரை (கீழ்அணைக்கட்டு)
கொஞ்சமாகப் போகும் தண்ணீரில் மக்கள் பூஜை செய்கிறார்கள்
வழியெல்லாம் ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்தார்கள், மக்கள் வாங்கிப் போய்க் கொண்டு இருந்தார்கள். இங்கு ஒரு ஆடு  மக்களுடன் நோன்பு கும்பிடுகிறது. அது அடுத்த நோன்புக்கு இருக்குமோ என்னவோ!
அணைக்கரைப் பாலத்தின்  அருகில் வாகனங்கள் நிறைய நிற்கிறது. விழாக் கடைகள் போட்டு இருக்கிறார்கள்
வீராணம் மதகடியில் ஆடிப்பெருக்குக்குப் படைக்க வந்த பெண்கள் கூட்டம். ”அதோ பாருடி நம்மைப் படம் எடுக்கிறார்கள் , எங்கள் படம் நாளை பேப்பரில் வருமா ?” என்று கேட்டார்கள், என்னிடம்  மலர்ந்த  முகத்துடன் இந்தப் பெண்கள்.என் சிறிய காமிராவைப் பார்த்தே இப்படிக் கேட்கிறார்களே, வெள்ளை உள்ளம் கொண்ட இந்தப் பெண்கள்!

கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அணைக்கட்டுக்குச் செல்லும் வழி இன்று திறந்து இருக்கும். தண்ணீர் திறந்துவிடும்போது பூட்டி விடுவார்கள் என்றார்கள்.



அணைக்கட்டிலிருந்து எடுத்த ஏரியின் காட்சி
 பூஜையை முடித்து விட்டு  அணைக்கட்டைப் பார்க்க வரும் மக்கள்.

கல்யாணமாலையை ஏரியில் விடும் பெண்ணும் மாப்பிள்ளையும்
கல்யாணமாலை
இந்த அம்மாதான் காப்பரிசி, வெல்லம் கலந்த அவல்பொரி கொடுத்தார்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார்கள் நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என்றவுடன் ஏரி பார்க்க வாந்தீர்களா? நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது ஏரியின் உச்சி வரை தண்ணீர் இருக்கும் நாங்கள் மேலே நின்றே படைத்து விட்டுப் போவோம் என்றார்கள்.  
அவர்கள் கொடுத்த காவேரி அன்னைக்குப் படைத்த பிரசாதம்

வீரநாராயண ஏரியில்  படகு விடும் காட்சியைப் பார்த்தால்  கோடிக்கரை பூங்குழலி நினைவுக்கு வருதா?  

அலைகடல் போல் விரிந்து பரந்த வீரநாராயண ஏரியக் காணொளி எடுத்தேன் ஆனால் அது இங்கு ஏறமாட்டேன்  என்று அடம் பிடிக்கிறது. இன்னொரு நாள் அதற்கு மனசு வரும் போது இங்கு உங்கள் பார்வைக்கு வரும்.
கீழே உள்ள வேதா அவர்களின் ஓவியத்தில் உள்ளதுபோல் பறவைகள் கறுப்பாய்ப் பறக்கிறதா? (ஏரிக்கரையில் பறவைகளின்  குதுகலம் அடுத்த பதிவில் வரும்.)

வெள்ளை நுரையுடன் அலை அடிக்கிறது
ஆசையே அலை போல ! நாம் எல்லாம் அதன்மேலே - ஓடம் போல
வீராண குழாய்கள்- ஆனால் இது புதுக் குழாயாக இருக்கிறது. பழையது மிக பெரிதாக இருக்கும். அதன் உள்ளே  வீடு இல்லாதவர்கள் குடித்தனம் நடத்தினர் என்று வரும்.

 கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில்  காவேரி ஆற்றையும் அதன் கரைகளின் அழகையும், நாட்டின் செழிப்பையும் சொல்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள், மறுபடி படிக்க வசதியாக பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கியில்  வருகிறது.  ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை ப்பொழுதில் தொடங்குகிறது கதை அதற்கு பொருத்தமாய்  3/8/2014 முதல் வந்துவிட்டது..

கல்கி அவர்களின் அழகான கற்பனை:-

ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.

ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு  ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில்  உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது  வழக்கம்
.
                 

ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள்,  பறவைகள் பறந்து வரும் அழகு!

வந்தியதேவன்  குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-

// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள்  செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில்  தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின்   ஓரமாக  எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து  ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில்  இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//


//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில்  பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு  கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை  அளித்துக் கொண்டிருந்தது.//

இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.

காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள் பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

போனமாதம் வீரநாராயணபுரம் சென்ற போது  எடுத்த படங்கள் பின் வருவன

காலைவேளையில் வயல்வெளி, கதிரவன் வரவுக்கு முன் புல்மேல் பனித்துளி
                                               பாதைகளுக்கு மரக்கூடாரம்

இரு பக்க மரமும் சேர்ந்து பாதைக்குக் கூடாரம் அமைக்கிறது

வீரநாரயாணப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் மதிலுக்கு  அப்பால்  குலை குலையாய்க் காய்த்துத் தொங்கும் மாங்கனி
மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது. 
 வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை  ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.

                                                      வாழ்க வளமுடன்.
                                                                 ----------------