செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டே வருக!




அன்பு வலைத்தள அனபர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
---------------------

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் கோவில்







சென்ற பதிவில் மணக்குடி ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போன போது அந்த கோவிலில் உள்ள  நடராஜர்,  பக்கத்து ஊர் கருங்குயில்நாதன் பேட்டையில் உள்ள சக்திபுரீஸ்வரர் கோவிலில்  பத்திரமாய் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு போய் வந்தோம் என்றும் ,அதை அடுத்த பதிவில்   பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். இப்போது அக்கோயில் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இந்த கோவிலும் தருமபுரஆதீனத்தைச் சேர்ந்த கோவில்தான். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் தான் இக்கோயிலையும்  பார்த்துக் கொள்கிறார்.  வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. நாங்கள் போனபோது  திறந்து காண்பித்து பூஜை செய்து பிரசாதங்கள் கொடுத்தார். 

சுவாமிக்கு முன்பு உள்ள நந்தியம்பெருமானை வணங்கி உள்ளே ஸ்வாமியை தரிசிக்கச் சென்றோம். சுவாமி சன்னதிக்கு உள்ளே  பெரிய பிள்ளையார்  இடதுபுறம் இருக்கிறது. வலது புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன். கருவறையில் சுவாமி பெரிதாக அழகாய் இருந்தார்  காலையில் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்கு செய்த அலங்காரம் அழகாய் இருந்தது.

அடுத்து வெளிப்பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கு  தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் அழகாய் எழுந்தருளி  இருந்தார்கள்.வேறு சந்நிதிகள் இல்லை. மூன்று படிகள் ஏறிப்போய் தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்ய வேண்டும். தூண்கள் அழகிய வேலைபாடுகொண்டு இருந்தது.

                                         


மற்ற ஸ்வாமிகள் இருந்த மண்டபங்கள் பழுது அடைந்து புல், பூண்டு மண்டி கிடந்தது. அப்புறம் ஸ்வாமி பின்புறம் மதிலில் லிங்கோத்பவர் இருந்தார் அழகாய். 

வெளிப்பிரகாரம் சுற்றி வரும் போது வன்னிமரம் அழகாய் இருந்தது தலவிருட்சமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

அம்மன் சன்னதி வெளி விமானம் மிகவும் மரம் வளர்ந்து  மேலே உள்ள ஸ்வாமி சிலைகளை தள்ளப் பார்க்கிறது.   உள்ளே அம்மன் மிக அழகான அலங்காரத்தில் இருந்தார்.குருக்கள் செய்திருந்த அலங்காரத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.  ஆனந்தவல்லி அம்மனைப் பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.

கோவிலின் சிறப்பு:- இந்திரஜித்துக்கு காட்சிக் கொடுத்த இடம். தக்கனின் யாகத்தில் பார்வதி அவமானப்பட, கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரை அனுப்ப, பயந்த இந்திரன் குயில் வடிவெடுத்து வழிபட்டது. கருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் பேட்டை என்று பெயர் காரணம் தாங்கி இருக்கிறது.

சுவாமி சந்நிதி விமானம்- மரம் வளர்ந்து இருக்கிறது


ஸ்வாமி சந்நிதி மதில்- இடியும் நிலையில்

சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும்  எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
----------------------------

நாளை முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்க சீனா சார் அழைத்து இருக்கிறார். இங்கு என் வலைத்தளத்தில் வந்து படிப்பதுபோல் அங்கும் வந்து ஒருவாரம் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

ஆரம்பத்தில் நான் எழுதிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் வலைச்சரத்திற்கு,  பார்ப்போம் நாளை!

                                                      வாழ்க வளமுடன்.
                                                                =====
               

வியாழன், 19 டிசம்பர், 2013

மணக்குடி ஆருத்ரா தரிசனம்

வெகு நாட்களாய் காணவில்லையே! என தேடினீர்களா?
போனிலும், மெயில் மூலமாகவும் போஸ்ட் போடவில்லையா? நலமா? என விசாரித்த  அன்பு வலை உலக நட்புகளுக்கு நன்றி.

இந்த முறை ஊர்களில் நெட் இல்லாமல் இருந்து விட்டேன்.  இணைய பயன்பாடு இல்லாமல் பழைய காலம் போல் வானொலி கேட்டுக் கொண்டு, உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டு   இருந்தேன்.

போஸ்ட் போட செய்திகள் நிறைய உள்ளன.  ஒன்று ஒன்றாய் போட வேண்டும்.

நேற்று, கூட்டம் இல்லாத - ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மட்டுமே திறந்து இருக்கும்- ஒரு கோவிலுக்கு சென்று வந்தோம்.

மபிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடி என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தேரஸ்வரர் திருக்கோயிலுக்குப் போய் இருந்தோம்.

திருக்கோயிலின் கிழக்குவாயில்
1941க்கு பிறகு இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகமே ஆகவில்லை போலும்!
கோவிலின் நிலையைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.

கோவில் குளம் மிக அழகாய் அல்லி மலர்கள் மலர்ந்து காணப்பட்டது. அழகிய படித்துறை உள்ளது. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.
அழகிய படித்துறையுடன் கூடிய குளம்

அல்லி மலர்கள் நிறந்து இருக்கும் அழகிய திருக்குளம்

நாங்கள் போனபோது குருக்கள், கோவிலை சுத்தம் செய்பவர்கள், தென்னைமரத்தில்  இளநீர் பறிக்க வந்த ஆட்கள் மட்டும் இருந்தார்கள். இந்த கோவில் சிதிலம் அடைந்து பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் இந்தக்கோயிலுக்குரிய நடராசர் திருஉருவச்சிலை பக்கத்தில் உள்ள கருங்குயில்நாதன்பேட்டை, அருள்மிகு சக்திபுரீஸ்வரர் திருக்கோவிலில் பாதுகாப்பாக இருப்பதாக சொன்ன குருக்கள் இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து நடராஜர் வருவார், இருந்து பார்த்து செல்லுங்கள்  என்றுசொல்லிப்போய் விட்டார். கோவில் திறந்து இருக்கிறதா ? என்று கேட்டால் திறந்து இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் உள்ளே போனால் ஏமாற்றம். அம்மன் , சுவாமி சன்னதி பூட்டி இருந்தது.  மற்ற சன்னதிகள் கதவு இல்லாததால் திறந்து இருந்தது . பார்த்து விட்டோம். நாங்கள் காத்து இருக்க வேண்டுமே என்று நினைத்து அவர் சொன்ன சகதிபுரீஸ்வரர் கோவிலுக்கே போய் பார்த்துவிடலாம் என்று  போனபோது நடராசர்  வேறு பாதை வழியாக சுந்ரேஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டார்.

 சக்திபுரீஸ்வரர் கோவிலைக் குருக்கள் திறந்து காண்பித்தார். அதுவும் மிகவும் பழுது அடைந்து இருந்தது. அதை அடுத்த முறை பகிர்கிறேன்
.
பின் மறுபடியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தோம்.  தனியாக யாரும் இல்லாமல்  சுவாமியும், அம்பாளும் இப்போது அங்கே எழுந்தருளி இருந்தார்கள். எங்களுக்கே எங்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மாதிரி இருந்தார்கள். நன்கு தரிசனம் செய்து விட்டு வந்தோம்.
நடராசரும் சிவகாமியும்
நடராசப்பெருமானின் திருவடிகளின் கீழே பஞ்சமுகவாத்தியம் வாசிக்கும்  உருவம்
பூதகணம்
அழகான நடராஜர்! அம்பாள்!  நடராஜரின்  திருவடி அருகில் இருபுறமும் அழகான சிவகணங்கள் இருந்தார்கள். ஒருவர் பஞ்சமுகவாத்தியம் வாசித்தார். இன்னொருவர் தாளம் வைத்து இருந்தார். பூமாலைகள் முதலிய அலங்காரங்கள் எதுவும் இல்லாதிருந்ததால் இவ்வுருவங்களைப் பார்க்கமுடிந்தது.

ஸ்வாமி சுற்றி வருவதற்காக கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்து இருந்தார்கள்.  சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி தவிர மற்றவை கதவுகள் இல்லாமல் இருந்ததால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டு சுற்று மதில் சுவர்கள் உள்ள (உள்பிரகாரம்,வெளிப் பிரகாரம்) அழகிய கோவில், கவனிப்பு இல்லாமல் இருக்கிறது.


திருமடைப்பள்ளியின் இடிந்த தோற்றம்


உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் நடுவில் நடராஜர் சுற்றி வர சுத்தம் செய்து இருக்கிறார்கள்.


இரண்டு சுற்று மதிலில்  ஒரு சுற்று மதில் உடைந்த கோலம்

நடராஜர் விமானம் கலசம் இழந்த நிலையில்

அருள்மிகு செளந்திரநாயகி அம்பாள் சந்நிதி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சந்நிதி
தேவார மூவர்
மகாவிஷ்ணு, முருகன்,வள்ளி, தெய்வானை

இலக்குமி
தக்ஷ்ணாமூர்த்தி
பைரவரும் சூரியனும
பழங் கல்வெட்டு
சண்டேசுவரர்
புதிய கல்வெட்டு
கோவிலில் உள்ள சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் கோவிலுக்குக் கூட்டம் வரும்  ( இப்போது எல்லாம் எல்லாக் கோவில்களிலும்  அதன் சிறப்பை விளம்பரம் செய்கிறார்கள்) இந்த  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின் பெருமை என்னவென்றால் ,இது பார்வதியை மணக்க இறைவன் கயிலையிலிருந்து வந்து தங்கிய இடம். அதனால்தான்  தான் மணக்குடி என்று இவ்வூருக்குப் பெயர் போலும்!  கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வழிபட வேண்டிய இடம் என்று சொல்கிறார்கள் .


கோவிலில் இறைவனைத் தரிசனம் செய்து வீட்டுக்கு வந்த பின் அவருக்கு  பிடித்த களி படைத்து  களிப்பு அடைந்தேன்!

வாழக வளமுடன்
------------------



புதன், 30 அக்டோபர், 2013

தீபாவளி வாழ்த்துக்கள்

(படம் வரைந்தது - என் கணவர் ) 
தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் அவர்களுக்கு பிடித்த ஆடைகள், அவர்களுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் கிடைக்கும் நாள் அல்லவா! தீபாவளி.வாணவெடிகள்.குழந்தைகள் வெடிக்கும் போது பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் கவனமாய்.
தீபாவளி அன்று குழந்தைகள் வெடிக்கும் போது ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து  மத்தாப்பாய் சிரிக்கும் போது  எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.

 மலர்கள் ஏற்றிய மத்தாப்பு ’என்ற பதிவில்  கற்கை நன்றே வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் வித்தியசமாய்  நாற்பது ஏழைச் சிறுவர், சிறுமியருடன் தீபாவளி பண்டிகையைக்   கொண்டாடியதையும் அவர்களின் உற்சாகத்தையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படி எல்லோரும் வித்தியாசமாய் ஒருமுறையேனும் கொண்டாட ஆசை வரும், படித்தால்.

 வயிற்றை கெடுக்காமல் பலகாரங்களை அளவோடு உண்ண வேண்டும்.  பலகாரங்களை  உறவு நட்புகளுக்கும்,மற்றும்  தீபாவளி அன்று நம்மை நாடி வரும் ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ வேண்டும்.

வலை உலக நட்புகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
                                                              
                                                               வாழ்க வளமுடன்!

                                                                       -----------------

சனி, 26 அக்டோபர், 2013

ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

(நியூஜெர்சி) ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிகாய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.
                                                                         -------------

ஆலோவீனுக்கு எங்கள் வீட்டிலும், ஒரு சோளக்கொல்லை பொம்மை ஒன்றும் பெரிய  பறங்கிக்காயும்(உண்மையான பறங்கிகாய்) வைத்து இருக்கிறோம். சிறிய பறங்கிக்காய் அலங்கார விளக்கும் மாட்டி இருக்கிறோம். பேரனுக்கு டைனோசர் போல் வடிவு அமைக்கப்பட்ட ஆடை வாங்கி இருக்கிறது. வீடுகளுக்கு போய் சாக்லேட் வாங்கி வர ஆரஞ்சு கலர் பறங்கிக்காய் கூடை  வாங்கி உள்ளது. பேரனுக்கு உடை வாங்க கடைக்கு போனபோது கடைகளில் உள்ள பொம்மைகளை எடுத்த படங்கள் பின் வருகிறது , உங்கள் பார்வைக்கு.

                            
பறங்கி காய் பொம்மைகள்
பறங்கி காய் பொம்மைகள்

சோளக் கொல்லை பொம்மைகள்
மூகமூடிகள்
மிட்டாய் வாங்க எடுத்துச் செல்லும் கூடைகள்
வயதான பிச்சைக்காரர்
அவரின் பின் பக்கம்
வீட்டு வாசலில் தொங்கவிடும் பொம்மைகள்
கல்யாண மாப்பிள்ளை
தொங்கும் பூதம்
எலும்பு மாலைகள்,  எலும்புக்கூடு  ஆடைகள்
பேய்க் கைப்பை
வெட்டுப்பட்ட உடல்கள்
சூனியக்காரி
கல்யாண உடையில் எலும்புகூடுகள்
மண்டை ஓடு லாந்தர்
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட எலும்புகூடு
ராட்சச வெளவால்
வைக்கோல் திணிக்கப்பட்ட பயங்கர பொம்மைகள்
மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவன்
அழகாய், கட்டமாய் வெட்டப்பட்ட வைக்கோல் மஞ்சள் சிவந்தி மலர்த் தொட்டி, நிஜ பறங்கிகாய்
அழகிய பறங்கிக்காய் பொம்மைகள் மேல் எலும்பு கூடுகள்



சோளக்கொல்லை பொம்மைகள்

இலை தெரியாமல் பூத்து இருக்கும் ஆரஞ்சும் சிவந்திப் பூக்கள்


கடைகளில் ஆலோவின் உடைகள் , மண்டை ஓடு ஆடை, எலும்புகூடு ஆடை,சூனியக்காரி ஆடை, வெட்டுப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட உள்ள உருவங்கள்,கை, கால் தனியாக, தலை தனியாக இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இரும்பு சங்கிலிகாளால் கட்டப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் பெரியசிலந்திகள், பெரிய வெளவால்கள், திருமண உடையுடன் இறந்தவர்களின் எலும்புகூடுகள் என்றும், பிச்சைக்கார தோற்றம் கொண்டவை என்றும் அவர் அவர் விருப்பபடி நிறைய இருக்கிறது. 
பக்கத்துவீடுகளில் நிறைய பறங்கிக்காய்கள், மரத்தில் தொங்கும் எலும்புகூடு, கார்செட் கதவில் பெரிய சிலந்தி வலைகள் வைத்து இருக்கிறார்கள்.
சோளக்கதிர் காய்ந்தவை, கோதுமை வைக்கோல் எல்லாம் வைத்து பறங்கி காய்களும் வைத்து இருக்கிறார்கள். இந்த சம்யம் பறங்கிகாய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

முன்னோர்களை வணங்கும் பழக்கம் எங்கும் இருப்பது நல்ல விஷயம் தானே!

வாழ்க வளமுடன்!
------