திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு சிந்தனைகள்





என் தங்கை,  கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று  கடந்த வாரம்
குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்.  நிறைய  கோவில்களுக்கு  தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.

மார்கழி மாதம் என்றாலே கோவில் வழிபாடு சிறப்பு அல்லவா!

எங்கள் அம்மா மார்கழி என்றால், அதிகாலை நீராடி , விளக்கு ஏற்றி, திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி , கோவிலுக்கு சென்றுவருவதை  எங்கள்  எல்லோருக்கும் வழக்கப்படுத்தி இருந்தார்கள். நானும் என் தங்கையும்
அதிகாலை எழுந்து  வண்ணக் கோலம் போட்டும் , கோவிலுக்குப் போயும்  எங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டோம்..

முன்பு, ’என் அம்மாவின் பொக்கிஷங்கள்’ என்று அம்மா எழுதி வைத்து இருந்த பாடல்களை பகிர்ந்து கொண்டேன்.

இந்தமுறை -   என் அம்மா குமுதம் பத்திரிக்கையில் 1960, 61, 63 , வருடங்களில்
வந்த அறிஞர்களின் பொன்மொழிகளை தொகுத்துத் தைத்து வைத்திருந்த பழைய  புத்தகத்திலிருந்து சிலவற்றைப் புத்தாண்டுச் சிந்தனைகளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன்.






1. நல்ல கருத்துக்களை, உயர்ந்த பண்புகள் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி
சிந்தனை செய்தால்தான் அவற்றிடம் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு, உண்டானால் தான் அவற்றுக்காக ஏங்குவோம். ஏங்கினால் தான் தேடுவோம். தேடினால் தான்  அழகும் அருளும் நம் வாழ்க்கையில் புகுந்து அவை நமக்கு சொந்தமாகும்
                                                      .------- வேன் டைக்.

2. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
உங்களுடன் சேர்ந்து வாழ்பவர்களுடைய நற்குணங்களை -- உதாரணமாக
ஒருவருடைய சுறுசுறுப்பு,  இன்னொருவருடைய அடக்கம்,  மற்றொருவருடைய கொடை, இவை போன்றவற்றை கண் முன் நிறுத்திக் களிப்படைவதில் இருக்கிறது.
                                                      ---- மார்கஸ் அரீலியம்.


3. உற்சாகம் இழந்து விட்டீர்களா?
அதைத்  திரும்ப அடைய ஒரு ராஜபாட்டை இருக்கிறது.  உற்சாகமாக எழுந்து
உட்காருங்கள்.  உற்சாகமாக நடந்து கொள்ளுங்கள்.  உற்சாகமாகப் பேசுங்கள்,
துணிச்சலை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?  அப்படியானால் துணிச்சல்
உள்ளவர் போல் நடியுங்கள்.  முழுமனத்தோடு,  உறுதியுடன்  நடியுங்கள் குலைநடுக்கத்துக்குப் பதில் வீராவேசமும் உண்டாகும்.

                                                  --------  வில்லியம் ஜேமஸ்.

4. இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தியடைவது சரிதான். ஆனால் இருக்கிற  திறமை போதும் என்று திருப்தியடைவது சரியல்ல.

                                                      ---------- மாகின் டாஷ்.

5. தோல்வி எதை நிரூபிக்கிறது?

 வெற்றி அடைய வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் போதிய வலு
இருக்கவில்லை என்ற ஒன்றை மட்டும் தான்.

                                                         --------- பெர்வீ

6. எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
எல்லாவற்றையும் சாதிக்கலாம்.  நம்புங்கள்.  நாம் பலவீனர்கள் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்
                                                     --------  விவேகானந்தர்.


7.என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களால் வரவழைத்துக் கொள்ள முடிந்தால்,  எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாகச் சாதித்து விடுவீர்கள்.  மிக எளிய காரியமாக இருந்தாலும் அதை உங்களால் செய்ய  இயலாது என்ற கற்பனை செய்து கொள்வீர்களேயாகில்,  செய்ய முடியாமலே போய்விடும். கறையான் புற்றுக் கூடக் கடக்க முடியாத மலையாகிவிடும்.

                                                      --------எமிலி கூவே.

8. செயலை விதையுங்கள்
பழக்கம்  உருவாகும்
‘பழக்கத்தை விதையுங்கள்
குணம் உருவாகும்
குணத்தை விதையுங்கள்
உங்கள் எதிர்காலம் உருவாகும்.
                                                     --------- போர்டுமன்.

9. தன் கடமை எது  என்பதை உணர்ந்தவன் அறிவாளி ; கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி ;  கடமையை செய்பவன் நல்லவன்.
                                                      ---------ஜோர்தான்.


10.எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது  ஆகவே தாயைப்  படைத்தார். --
-                                                      ------- யூதர்.

                                                 **********
அம்மாவும் நானும்

                                                     
 உலகத்தில்  இந்த (2012)வருடத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் இனி
நடக்காமல் இருக்கவும், வரும் காலம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும். மனநிறைவும்  தரும் நாட்களாய் இருக்கவும்   நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்.

 வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

                                                             வாழ்க வளமுடன்!


                                                                   ________________

வெள்ளி, 21 டிசம்பர், 2012

ஆஹா உருளை !


நான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம்  தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்

சகோதரி ஜலீலா அவர்கள் சமையல் போட்டி அறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்

நான் ஊருக்கு போய் விட்டு வந்ததால்  அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து  சமையல் ராணி என்று பட்டம்  கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க  மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்

சமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர்.  கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

முன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது.  என் கணவர்  கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம்  777  என்ற திடீர் தயாரிப்புக்கள்
வாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும்  திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள்.  நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு  செய்து கொடுத்தது இல்லை.


திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக  இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.
அவர்களுக்கு  அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும்  பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து  பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள்  தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.

தனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:

தனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது.

தனியா பொடி:
----------------------
தேவையானவை



உளுத்தம்பருப்பு  -அரைக்கரண்டி,
கடலைப்பருப்பு   -அரைக்கரண்டி
தனியா          - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )
மிளகு           -கால்ஸ்பூன்.
வற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)
உப்பு-             அரை ஸ்பூன்(தேவைக்கேற்ப)
பெருங்காயம்    -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு      அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால்  பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக்                  கொள்ளலாம்.



மேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும்  வாணலியில் சிறிது  நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு  சிறிது சிவப்பாய் (கருகாமல்)
ஆறியவுடன்  பொடி செய்து கொண்டு  பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து  சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.



தொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு காரக்கறி

அரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை  வைத்து  உருளையை நன்கு கழுவி விட்டு  அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள்,  கொஞ்சம் உப்பு போட்டு  பிரட்டி, சிறு தீயில்  அவ்அப்போது  கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)
சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே!
(என் கணவர் வரைந்த படம்)



வெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.

தக்காளி சாதம்

தக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்





அரிசி அரை கப்.
தக்காளி பழம் 2 பெரியது.
பெரிய வெங்காயம் 1
பச்சை பிளகாய் 2
கடுகு கால்ஸ்பூன்
உளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.
சாம்பார் பொடி அரைஸ்பூன்.
ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால்  உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.



சாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து  ஒரு தட்டில் போட்டு  ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது  பட்டை, சோம்பு , கிராம்பு
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு  சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி  இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக
இருக்கும் தக்காளி சாதம்.



இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும்,   உருளை சிப்ஸ், வடகம், வத்தல்  எல்லாம் நன்றாக இருக்கும்.

இன்னொரு உருளை சமையல் குறிப்பு:

உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.

மற்றுமொரு சமையல் குறிப்பு:

ஆப் பாயில் உருளை


உருளையை கொஞ்சம் கனமாய்  வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து  எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்)  என் அப்பா ,என் கணவர்,  என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.







இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு  பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு    பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட  இருக்கலாம்.


                                                                --------------------




ஞாயிறு, 16 டிசம்பர், 2012

எங்கள் குலதெய்வம்



                                                                 எங்கள் குலதெய்வம்.




எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் மடவார் விளாகம் எனும் இடத்தில்  இருக்கிறது.   ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள்.   வீட்டில் என்ன  விசேஷம் நடந்தாலும் முதன் முதலில் குலதெய்வத்திற்கு  அந்த விழா சிறப்பாய் தடை இல்லாமல் நடைபெற ஒரு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள்.   குழந்தைகளுக்கு , அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உடம்பு சரியாகவேண்டுமென்று  காசு முடிந்து வைத்து  பிரார்த்தனை செய்து கொள்வார்கள். 


 என் மகளின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை.  இப்போது அவன் இறைவன் அருளால் நலம் பெற குலதெய்வத்தை வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துள்ளேன். அவர் அவனை நல்லபடியாக காப்பார். 

சனிக்கிழமை, திங்கள் கிழமை  குலதெய்வ வழிபாடு மிக விசேஷம் என்பார்கள்.  மற்ற நாட்களும் மிக நல்ல நாள் தான். 

வீட்டில் ஏதோ குறையோ, மனக் கஷ்டமோ என்று சிலர் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனால் அவரும் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்பது தான்..  

இப்போது  தொலைக்காட்சிகளிலும் எங்கள் குலசாமி, என்று பிரபலங்களின் குலதெய்வ வழிபாட்டை ஒளிபரப்புகிறார்கள். பத்திரிக்கைகளில் முக்கிய பெரிய மனிதர்களின் குலதெய்வம், வீட்டுப் பூஜை அறை முதலியவற்றை காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவரும் தன் தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக குலதெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.

மாதா மாதம் குலதெய்வத்திற்கு பணம் எடுத்து வைத்து விடுவேன். அதில் தான்  நாங்கள் கோவில் போகும்போது செய்ய வேண்டிய, அபிஷேகம், வஸ்திரம் சாற்றுவது ஆகிய செலவுகளுக்கு பயன்படுத்துவோம். 


வருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது அங்கு போகிறவர்கள் இருக்கிறார்கள் . அன்று மிகவும் கூட்டமாய் இருக்கும்.. எங்கள் வீடுகளில்  கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.  பின், குழந்தை பிறந்தால் போய் வருவோம்.. அது தான் இப்போது முடிகிறது. அப்படிப் போகும் 
போது குடும்பத்தினர் மட்டும் போவதால் நின்று நிதானமாய் வழிபாடு செய்து குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி , பொங்கல் வைத்து உறவோடு  சேர்ந்து உண்டு மகிழ ஒரு வாய்ப்பு.

போன மாதம் 14 ம் தேதி  இரவு நாகர்கோவில்  விரைவு ரயிலில் திருநெல்வேலிக்குப்  பயணம் செய்து .நான் , என் கணவர்,  என் மகன், மருமகள்,  பேரன் ஆகியோர்  குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்தோம்.  பொங்கல் வைக்க வேண்டும் என்று  ஆசை.  ஆனால்  எங்கள் குடும்பமே ஒன்றாய்ச் சேர்ந்து தான் பொங்கல் வைத்து இருக்கிறோம்.  தனியாக வைத்தது 
இல்லை.  அதனால் குருக்களை பிரசாதம் செய்து கொண்டு வரச்சொல்லி, சின்ன அளவில் அபிஷேகம் செய்து, சாமிக்கு  வஸ்திரங்கள் சார்த்தி வழிபட்டு வந்தோம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று. பிராத்தனை செய்து  
கொண்டோம்.

எங்கள் குல்தெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர்.  அவர் இருக்கும் இடத்தைச்  சுற்றிலும் வயல் வெளி,  அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் களக்கோடி சாஸ்தா என்ற பெயர்.
இந்த படம்  மட்டும் ஆகஸ்டு மாதம் (போன முறை )எடுத்தது

பக்கத்தில் ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள்  என்று மிகவும் ரம்மியமாக இருக்கும். 
வயல்வெளி

ஏரியில் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற மாதிரி பறவைகள்  வரும்.. கறுப்பு ஹெரான், பெரியவாய் பெலிக்கன் போன்ற அபூர்வ பறவைகள் அங்கு பார்த்தோம். 

பெலிக்கன்
ஏரியில் முன்பு குளித்து விட்டு ஈர உடையுடன் பொங்கல் வைப்பார்கள்.  ஏரியில்  மீன்கள் நிறைய இருக்கும். பறவைகளுக்கு  வேண்டிய உணவுகள் கிடைப்பதால் ஏரியைச் சுற்றி நிறைய பறவைகள் வரும் பார்ப்பதற்கு  ரம்மியமாய் மனது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கும்.

 ””கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில் -வண்ணக்
    குருவி பறக்கும் அந்த வனத்துறையில்
   கோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து 
   மதுரை மீனாட்சி  கொடி பறக்கும் உனை நினைந்து -
   அம்மா உனை நினைந்து.;;

என்ற  பாடல் நினைவுக்கு வந்து சென்றது .

 முன்பெல்லாம் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து செல்லும்போது , என் கணவரின் அத்தை வீட்டிலிருந்து  துவையல் அரைத்து,  அப்பளம் பொரித்து, எல்லாக் காய்களும் போட்டு, சாம்பார் வைத்து  எடுத்துச் செல்வோம். , அங்கு சுவாமிக்கு வெண்பொங்கல். அம்மனுக்கு அரிசியும், பாசிப்பருப்பும் சேர்த்து பாயசம்  வைப்போம். பனை ஓலை, சிறு குச்சிகள் வைத்து. கல் கூட்டி. வெண்கலப் பானையில் பொங்கல் வைப்போம். சாமி கும்பிட்ட பின் அனைவரும் குதூகலமாய் அங்கேயே இலை போட்டு  உண்போம்.. வயலில் வேலை பார்ப்பவர்கள் , ஆடு மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் கோவில் 
மணி அடித்தால் வந்து விடுவார்கள். அவர்களுக்கும் கொடுத்து உண்டு வருவோம்.

பங்குனி உத்திரம் அன்று கூட்டம் நிறைய இருக்கும்.  கூட்டம் இல்லாத நேரம்  நாங்கள் போனதால் குருக்கள் வரும் வரை,  பேரன் கோவில் வெளிப்புறம் நன்கு விளையாடினான். ஆலமரத்தின் இலைகளைக் கைகளாலும், குச்சிகளாலும் தள்ளித் தள்ளி விளையாடினான். கோவிலைச் சுற்றி சுற்றி வந்து சந்தோஷமாய் விளையாடினான். ஆடுகள் மேய்வதையும் மேய்ப்பவர்களையும் பார்த்து மகிழ்ந்தான்.   





                  

ஸாதிகா என் பேரனின் படம் கேட்டு இருந்தார்கள் .  அவர்கள் விருப்பத்திற்காக அவன் படம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவனை வாழ்த்துங்கள். மாதாஜி ஸாதிகா!..

 காலையில் 10 .30 மணியிலிருந்து காத்துக் கிடந்தோம் குருக்களின் வருகைக்காக. ஆடு , மேய்ப்பவர்கள், மற்றும் வயலில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம்  ”போன் செய்து விட்டீர்களா  குருக்களுக்கு ? அவர் 10 கோயிலுக்கு மணி அடிக்க வேண்டும், மெதுவாய்த் தான் வருவார் ”.  என்றார்கள். மதியம் 12 மணிக்குத் தான் வந்தார். 

பின் அபிஷேகம், அர்ச்சனை செய்து குலதெய்வத்தை வணங்கினோம். வழிபாடு முடிய பிற்பகல் இரண்டு மணி பக்கம் ஆகி விட்டது.  அங்கு உள்ளவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்து விட்டு  நாங்களும் சாப்பிட்டு குருக்களுக்கு நன்றி சொல்லி, குலதெய்வத்தைப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து வந்தோம்.

முருகன் கோயில்


அதன் பின் குலதெய்வம் கோவிலுக்கு அருகேயே ஒரு மலைக் கோவில் இருக்கிறது.. எங்கள் கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சரியான பாதை இல்லை, வரப்பில் நடந்து தான் போக வேண்டும். குழந்தையை தூக்கிக் கொண்டு வரமுடியாது என்பதால் என் மருமகள் வரவில்லை. மகனும், நானும், என் கணவரும்  போனோம். பல வருடங்களாக 
அந்த மலைக்கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்து அது இந்தமுறைதான் கைகூடியது.  

என் கணவர்,’ நீ வரப்பில்  நடப்பாயா ?செருப்பில்லாமல் நடக்க வேண்டும்’ அது இது என்று சொன்னார்கள். எனக்கு வயற்காட்டில் வரப்பில் நடக்க ஆசை. அருமையான அனுபவம்.

சில இடங்களில் வரப்பு காய்ந்து இருக்கும் சில இடங்களில் அப்போது தான் மண் அணைத்து புதிதாக வரப்பு கட்டி இருப்பார்கள் அதில் மாட்டின் குளம்பு அழுந்தி இருப்பதை வைத்து அதன் ஆழத்தை கவனித்துக் கொள்ளலாம்.  அதை லாவகமாய் கடந்து போனோம்.  அந்த உயரமான வரப்பு சில இடங்களில்  குறுகியும் சில இடங்களில் அகலமாயும் இருந்தது.. பச்சைப் பசேல் என்று மஞ்சள் செடிகள், மற்றும்  மரவள்ளி கிழங்கு என்று நினைக்கிறேன், பயிர் செய்து இருந்தார்கள். 





ஒரு கிலோ மீட்டர் வரப்பில் நடந்து போனால் மலைக்கோவில்.  அதன்பின் பாதை இல்லை,  மலைப் பாறை வழியாக ஏறிச் சென்று அந்தச்சிறுகோயிலை அடைந்தோம். கோயிலின் சிறிய கதவுகள் மூடியிருந்தன. பூட்டிய கதவின் சிறு துவாரத்தின் வழியாக முருகனை வழி பட்டோம். அங்குள்ள முருகனுக்கு சரவணன் என்று பெயர்.. அருகில் ஒரு பாறையில் சுனை இருந்தது. 

வள்ளி சுனை
அங்கிருந்து பார்த்தால் மலையைச்சுற்றி  கண்ணுக்குக் குளுமையாய் தென்னைந் தோப்பும், வயல்களும் அழகாய் தெரியும். ’கடவுளே இந்த இடம் இயற்கை மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன். 

வெகு நாள் ஆசை  என் மகனால் நிறைவேறியது. அவன்தானே அங்கு போக வேண்டும் என்றான்... என் மகனுக்கு நன்றி.








புதன், 12 டிசம்பர், 2012

வந்தேன் , வந்தேன்


வந்தேன், வந்தேன் ,

நலமா எல்லோரும்.

ஆகஸ்டு மாதம் முதல்  பேரனின் வரவால்  இணையத்திற்கு இடை இடையே தான்வர முடிந்தது.  என் மகன்  ’போன வருட கொலுவைவிட அடுத்த ஆண்டு கொலுவை சிறப்பாக கொண்டாடுவோம். நாங்கள் வருவோம்’ என்று சொல்லி இருந்தான்.  அது போலவே  வந்து சிறப்பித்தார்கள். தான் வரும்முன் தன் மனைவியையும், மகனையும் அனுப்பிவிட்டான்.  அவர்கள் வந்த இந்தவருடம் ,இரண்டு கிருஷ்ணஜெயந்தி வந்தது . அதனால் இரண்டாவது கிருஷ்ண ஜெயந்தியில் கலந்து கொண்டான் பேரன்.  பின் நவராத்திரியும் அவர்கள் வரவால் சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது.   மகன், மருமகள், பேரனின் கை வண்ணத்தில் நவராத்திரி  மேலும் சிறப்பானது. அதை  இன்னொரு பதிவில் பகிர்கிறேன்.

பல ஊரு தண்ணீர் குடித்து , சூறாவளி சுற்றுப் பயணம்  செய்ததில் உடம்பு கொஞ்சம் சரியில்லை.  பேரன் வருகையால் நடைமுறை வாழ்க்கையே மாறி விட்டது.  உடல், பொருள்,  ஆவி,  நேரம்,  காலம் எல்லாம்  அவனைச் சுற்றித் தான் ஓடியது.  இப்போது அவன் ஊருக்குப் போய் விட்டான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவனுடன் இருந்த நாட்களை மனச்சுரங்கத்தில் இருந்து எடுத்து அசை போட்டு கொண்டு இருக்கிறோம். அடுத்த விடுமுறைக்கு அவன் வரும் நாளை எதிர்பார்த்து.

தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . மகன் ,மருமகள், பேரனை வழி அனுப்பி வைத்து விட்டு  26 ஆம் தேதி தான் ஊரிலிருந்து வந்தேன்.  கார்த்திகைப் பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் ஊர்ப் பயணம்,  குடும்ப விழாக்களில் கலந்து  கொண்டு  11ஆம் தேதி தான் வந்தேன்.

தீபாவளி சிறப்பாக நடந்தது . அதற்கு முன்பு எங்கள் மாமா, அத்தை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.

தீபாவளி வாழ்த்து சொன்ன ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள்.  அந்த கேள்வியும் அவர்களுக்குப் பதிலும் கீழே:

//மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்தனைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா?  நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே? அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்?//


என்று ஹுஸைனம்மா கேள்வி கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு :

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் எல்லாம்  முன்பே நடந்து விட்டது. அதை எல்லோரும் சேர்ந்து நடத்தி விட்டோம்.

சஷ்டியப்தபூர்த்தி என்பது - 60 வயது பூர்த்தி ஆனவுடன் செய்வது. சதாபிஷேகம் என்பது - 80 பூர்த்தியானவுடன் செய்வது,
கனகாபிஷேகம் என்பது - மகனுக்கு பேரன் பிறந்தால் பேரன்  கையால் தங்கக் காசுகள், தங்கப்பூ, வெள்ளிப்பூ போட்டு  கனகாபிஷேகம் செய்து வணங்குவது.

நான் இதுவரை திருமண நாள்கொண்டாடவில்லை என்றது முதன் முதலில் திருமணம் செய்த தேதியை வைத்து அடுத்த வருடம் திருமண நாள்  கொண்டாடுகிறோமே அதை. அப்படி பார்க்கும் போது அவர்கள் திருமணம் செய்து 75 ஆண்டுகள் ஆகி  விட்டது. அந்த நாளைத்தான் பேரன், பேத்திகள் கொண்டாடினார்கள்.

ஹுஸைனம்மாவின் ஆர்வமான  கேள்விக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு இதில் பதில அளித்து விட்டேன்.

12.11.2012 ல் திங்கட்கிழமை  கோவையில் ’அன்னபூர்ணா உணவகம் ’கங்கா கலைஅரங்கத்தில்’ குடும்ப உறுப்பினர்களும்,  மற்றும் உள்ளூர் சொந்தங்கள் மட்டும் வைத்து எளிமையாக விழா  நடந்த்து.
விழா அறிவிப்புப் பலகை


விழா நாயகர்


காலை தேவார இன்னிசை கச்சேரி - என் மாமாவிடம் தேவாரம் கற்றுக் கொண்டவர்கள் தன் ஆசிரியரின் மணவிழாவிற்கு  மகிழ்வோடு பாடினார்கள்.

தேவார இன்னிசை

  மச்சினர் பேத்தி பாட்டு பாடினாள். என் தோழி  சில பாடல்கள் பாடினாள்.  பிறகு  கேக் வெட்டி மாமாவின் பிறந்தநாளும் 75 வது திருமண நாளும் கொண்டாடப்பட்டது.  வந்தவர்களுக்கு விழா நாயகனும், நாயகியும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்கள்.

பிறந்தநாள் கேக்

மணமக்கள் மாலை மாற்றல்
பிறகு என் கணவர் வந்தவர்களுக்கு நன்றி உரை சொன்னார்கள்.  மதியம் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

தீபாவளி 13ஆம் தேதி சிறப்பாக நடந்தது.   காலை மருமகள் மூவரும்( என் மருமகளும், மற்ற இரண்டு மருமகளும்)  சேர்ந்து  வடை, பஜ்ஜி எல்லாம் செய்தார்கள்.
வடை ரெடியாகுது

பெரிய மருமகள் தீபாவளி கோலம் வரைந்தாள்.  இளைய தலைமுறைகள் பொறுப்பை எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.

கோலம்
                                                         

மத்தாப்பு சுட்டு சுட்டு



சுழலும் தரைச்சக்கரம்
அன்று வீட்டுக்குப் பக்கத்தில்    உள்ள  பிள்ளையார் கோவிலுக்கு போய்  அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோம்.  பேரனுடன் கொண்டாடும் முதல் தீபாவளி.  மழலை மொழியால் எல்லோருடனும் கலந்து உறவாடி  தீபாவளியை சிறப்பித்தான். எல்லோருக்கும் மத்தாப்புக்களையும், புஷ்வாணம்,  தரைச்சக்கரம்  எல்லாம் எடுத்துக் கொடுத்து அவர்கள்  வைப்பதை  ஆசையாய் பார்த்து மகிழ்ந்தான் .ஆனால் அவன் வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.


                                               பூப் பூவாய் சிதறும் புஸ்வாணம்


புத்தாடைகளும் ,பலகாரங்களும் 
புத்தாடை அணிந்து மாமா அத்தையிடம் ஆசீர்வாதம்

14ம் தேதி மறு நாள் மாமாவின் நட்சத்திர பிறந்தநாள்.  அதற்கு கோனியம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்தோம்.

அன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி சென்றோம்.
எங்கள் பேரனை அழைத்துக் கொண்டு  குலதெய்வத்தை வணங்கி வர.

குலதெய்வம் இருக்கும் இடம் இயற்கையின் கொடை என்றுதான் சொல்லவேண்டும்.  அவசியம் பார்க்க வாருங்கள் என் அடுத்த பதிவில்.