சனி, 29 செப்டம்பர், 2012

புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.




புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும்  எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு  இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி  வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம்  அவர்கள் வீட்டில் தான்  பொழுதைக் கழிப்போம்  நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.


எங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.
அவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக  போகும்.   அம்மாவிற்கு பின் எங்கள்  சகோதர சகோதரி வீடுகளுக்கும்  அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம்  தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து  விடும் என்பார்கள்.   புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து  தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.

நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம்,   குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து  மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு  அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது! நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்
இவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து  போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக்  கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப்  பார்த்து சிரித்த பெண் குழந்தையை  எடுத்துவந்து வளர்த்தார்கள்.  பெண் குழந்தை வேண்டாம்  என்று பெற்ற  தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம்  வேண்டும்!  அந்தப் பெண்ணைப்  படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்

இறைவன் தன் பக்தைக்கு  பிடித்த மாதத்திலேயே அவர்களை அழைத்துக் கொண்டான்.  போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக  தன் மகள் வீட்டுக்கு  கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள்   இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம்.  அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா  என்று .   மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம்.  குழந்தைகள் இல்லையென்றால் என்ன ?அன்பால் பெற்றுக் கொண்ட  குழந்தைகள் எவ்வளவு? அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.

காது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு  ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே? தம்பி நல்லாருக்கா? என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.
அவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு.  எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி    நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள்.  சின்ன டைரியில்  போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.

அன்பு  அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
அன்பே தெய்வம்!
அன்பே அனைத்தும்.
அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.



புதன், 19 செப்டம்பர், 2012

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


அலங்காரத்திற்கு முன்


வெள்எருக்கம்பூவையும் நீலஎருக்கம்பூ மாலையையும், 
மல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.





வாசனை திரவியப்பொடி அபிஷேகம்

மஞ்சள் பொடி அபிஷேகம்





பசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள் ஆனபின் அதில் பிள்ளையார் உருவம் வந்து விட்டது, அந்த பிள்ளையார் , வெள்ளை எருக்கு பிள்ளையார்,  வெள்ளிப் பிள்ளையார்.வெண்கலப் பிள்ளையார்(வலஞ்சுழி), மாக்கல் பிள்ளையார் (சந்தனலங்காரத்தில் இருக்கிறார்.)




பிள்ளையார் கொலுவீற்று இருக்கிறார்

பிள்ளையாருக்கு பிரசாதங்கள்

பிள்ளையார் அணி வகுப்பு








எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர்




        பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
         ஆற்றம் கரையின் ஓரத்தில்அரசமரத்தின் நிழலிலே 
               வீற்றீருக்கும் பிள்ளையார் வினைகள் களையும் பிள்ளையார்
           அவல் பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
கவலையின்றித் தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார். 

சிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு      வாங்கிவந்தாள்.   இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி  வருகிறாள்.  இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா  கருணாசதனா" பாடினாள். 

பேரன், அம்மா  பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கிறான். இங்கு இருந்தால் அவனும் பாடுவான். மதுரையிலிருந்து பிள்ளையாரைப் பார்த்தான் ஸ்கைப்பில். 

எப்போதும் பிள்ளையார் ஐந்து நாள் அல்லது மூன்று நாள் இருப்பார். இந்த முறை ஒரு நாள் தான் இருக்கப் போகிறார். சில வருடங்களாய் ஒரே நாளில் எல்லா பிரசாதங்களையும் செய்யாமல் தினம் ஒன்றாய் செய்து வணங்கி வருகிறேன். என் அம்மா  பிள்ளையார் சதுர்த்தி என்றால்  நிறைய பிரசாதங்கள் செய்வார்கள்.  மெதுவடை, ஆமவடை, (பருப்புவடை) இனிப்புப் பிடிகொழுக்கட்டை,  பொரிவிளங்கா, சுண்டல், மோதகம் , எள்ளுருண்டை, அப்பம்,  புட்டு, இட்லி என்று மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .

போன வருடம்  பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு திருக்கயிலாயம் புறப்பட்டோம், அப்போது சென்னையில் என் கணவரின் அண்ணன் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினோம்.

இந்த வருடம்  திருசெந்தூர்ப் புட்டுஅமுது,  இனிப்புப் பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம் வைத்த மோதகம்,  கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல்,  எள்ளு உருண்டை,  அவல் பொரிகடலை , வடை , பழங்கள் வைத்துப் பிள்ளையாரை வணங்கினோம்.

அவருக்கு பிடித்த பழங்கள் என்று இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை வைப்போம்.  இந்த முறை நாவல் பழம் கிடைக்க வில்லை.   பேரிக்காய் கிடைக்கவில்லை.  

பிள்ளையார் மிகவும் எளிமையானவர்,  பசும் சாணம் பிடித்து வைத்து அல்லது ஒரு அச்சு வெல்லத்தை பிள்ளையார் என்று வைத்து வணங்கலாம். வணங்குவதற்குப் பூக்களும் எளிமையான எருக்கம் பூ போதும்.

பிரசாதங்கள் என்று அவல் பொரி, கடலை  போதும்.  ஏற்றுக் கொள்வார் !

எங்கள் வீட்டுப் பிள்ளையாரைத்  தரிசனம் செய்தீர்களா? பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.


பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம்.  நீர் நிலைகள் ஓடாமல் குட்டையாய் நிற்கிறது.  நீரும் அசுத்தமாய் இருக்கிறது. பலகாலமாய் இப்படிதான் செய்கிறோம்.


எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

இந்த படங்களையும் பாருங்கள் என் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா.


என் மகன் அவனே  செய்த பிள்ளையார்






மருமகள் செய்த பிரசாதங்கள்


மருமகள் இந்தியா வந்து இருப்பதால் என் மகன்  இந்த முறை  பழங்கள் வைத்து வணங்குவான் . இது போனவருட பிள்ளையார் சதுர்த்தி படங்கள்.