புதன், 21 மார்ச், 2012

நீரின்றமையாது உலகு





உலக தண்ணீர் தினத்திற்கு நம்மால் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

நீர்ப் பங்கீட்டில் நாம் இன்னும் நாகரிகம் பெறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் எல்லோரும் மாநிலம் மாநிலமாய்ப் பிரித்தே பார்க்கிறார்கள், மக்கள் சுயநலமாய். தண்ணீர் அதிகமாய் வந்து தங்கள் நாட்டுக்கு அழிவு ஏற்படும் பட்சத்தில் மட்டும் அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் தரும் மாநிலம், மற்ற நாட்களில் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது.


//’சோழநாடு கூட்டமைப்பு’ என்று ஒரு பத்திரிக்கை நடத்திவரும் ஆசிரியர் திரு.அரிமா வைரசேகர் மார்ச் 2012 இதழில், தனது கட்டுரையில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இருந்தார்.
அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

”காவிரி, முல்லை,பெரியாறு, பாலாறு வரிசையில் தற்போது இணைந்து இருப்பது தென்பெண்ணை ஆறு ஆகும். தென்பெண்ணை யாற்று நீரை தராமல் தடுக்க, கர்நாடகம் அதன் வேலையை ஆரம்பித்து விட்டது. போகிற போக்கில் தமிழகத்தை சகாராவாக மாற்றாமல் மற்ற மாநிலங்கள் விடாது போல தெரிகிறது. கர்நாடகம் நந்தி மலைத் தொடரில் பிறந்து ஹொசக் கோட்டை ஒரத்தூர் வழியாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி ஒசூர் அருகே கொடியா அணை, கெல்வரப்பள்ளி அணை, கே.ஆ.பி. அணை என்ற அணைகளின் மூலமும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் மூலமும் மொத்தம் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கர்நாடகத்திலிருந்து இந்த நீரை திருப்பி விட்டு அங்குள்ள ஏரிகளை நிரப்ப கர்நாடக அரசு புதிய திட்டத்தைப் போட்டுள்ளது. இதற்காக கர்நாடாக அரசு ரூ. 36 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் ஒட்டுமொத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவசாய நிலங்களும் பாலைவனமாக மாறும் அவலம் அரங்கேறும். தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அடுத்த போராட்டத்தை கர்நாடகம் ஆரம்பித்து வைத்துள்ளது. இதற்கு எல்லாம் ஒரே வழி அனைத்து நதிகளையும் தேசிய மயமாக மாற்ற வேண்டும்.”//

என்று தன் கட்டுரையில் அழகாய்க் குறிப்பிட்டு இருக்கிறார்.


இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கே எல்லாம் என்றால் கஷ்டம்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.

நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. இத்திட்டத்தை அமுலாக்க என்ன வழி என்று எல்லா அரசியல் தலைவர்களும் ஆலோசித்து அதை
நடைமுறைப் படுத்த வேண்டும்.

தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி, மழை நீர் சேமிப்புப் பற்றி, ’மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்று எவ்வளவோ சொல்லி விட்டோம்.

ஏரி குளத்தைத் தூர் வாருவது, ஏரி குளங்களைத் துண்டுபோட்டு விற்று குடியிருப்புப் பகுதிகளாய் மாற்றும் அவலத்தைத் தடுப்பது என்று எல்லோரும் நிறைய பேசியாகி விட்டது ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் சோகம்.

பிரமபுத்திரா நதி நீரை அதிகமாய் தன் நாட்டுக்கு திருப்பி விட முயலுகிறது சீனா என்கிறார்கள்.


ஒரு காலத்தில் வீதிகளில் ,வீடுகளில், நடை பாதைகளில் தண்ணீர் பந்தல் வைத்து வெயிலுக்கு தண்ணீர் அளித்து வந்தார்கள். இப்போது தண்ணீர் பாட்டில்களைக் காசு கொடுத்து வாங்கி கையில் எடுத்துச் செல்லும் காலம் ஆகி விட்டது.

வெயில் காலத்தில் மொட்டை மாடிகளில் தண்ணீரைக் கொட்டி, காலி செய்கிறார்கள். தங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்க! வேறு வழிகளில் வெயிலைப் போக்கிக் கொள்ளலாம். வெயில் காலத்திற்கு மட்டும் தென்னம்கீற்றுப் பந்தல் போட்டுக் கொள்ளலாம்.

வட மாநிலங்களுக்கு சுற்றுலா போனபோது மக்கள் தண்ணீருக்காக எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று பார்த்தோம். அங்கு பல இடங்களில் அருவி கொட்டுகிறது, நதி நுங்கும், நுரையுமாய் துள்ளிப் பாய்ந்து ஒடுகிறது. ஆனால் மக்களுக்குப் பயன் இல்லை. அவர்கள் வெகு தூரம் தண்ணீருக்காக நடந்து சென்று எடுத்து வருகிறார்கள்.

அருவிகள், ஆறுகள், குளங்கள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரை எப்படி எல்லோருக்கும் பயன்படக்கூடியதாக நம்மால் மாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் குடிநீர் வசதி செய்து த்ரப்பட வேண்டும்.


டாக்டர்.ப. முத்தையா மனோகரன் அவர்கள் 1996ல் ’விஞ்ஞானச்சுடர்’ என்ற (திரு அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படும்) அறிவியல் மாத இதழில்
நீர் நிர்வாகப்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார்.

//” நீர் தற்போது கிடைத்தற்கரிய அரிய பொருளாகக் கருதப்படுகிறது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பருவச் சூழலுக்கேற்ப மழை பெய்யும் அளவு நிச்சயமற்றதாக இருப்பதும், கிடைக்கின்ற நீரை நாம் சரிவர உபயோகிக்காமல் இருப்பதும் நம்மை எதிர்நோக்கும் அபாயங்களாகக் கருத வேண்டும். அதற்கு ஒரே வழி தகுந்த பயிற்சி வாயிலாக நீரை சரிவர நிர்வாகிக்க வேண்டும்.”

”நீர் நிர்வாகம் என்பது நீர் குறைந்த அளவில் இருக்கும் போது நிர்வகிப்பது மட்டுமல்லாமல் அதிக அளவில் இருக்கும் போது சிக்கனமாக, சரிவர உபயோகிக்கும் முறையாகும்.”

”நீர் நிர்வாகத்தைப் பொதுவாக மூன்று நிலைகளில் கையாளுவது நல்லது. அவை
1. அன்றாடத் தேவைகளுக்காக நீர் நிர்வாகம், (water Management Domestic level)
2. விவசாயத்தில் நீர் நிர்வாகம் (at Farm level)
3 .தேசிய அள்வில் நீர் நிர்வாகம் (Water maanagement at National level)

”விவசாயத்தில் நீரைப் பயிர்களின் வேரின் ஆழத்தைப் பொறுத்துப் பாய்ச்சினால் விரயமாவதைத் தடுக்கலாம், கணக்கிடப்பட்ட நீரைப் பயிரில் முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் பாய்ச்சுவதாலும் பல்வேறு நவீன பாசன முறைகளைக் கையாளுவதாலும் குறைந்த நீரில் அதிக உற்பத்தி இலக்கை எட்ட முடியும்” என்கிறார்.

எவ்வளவு மழை பெய்கிறது என்பதை விட பல வழி முறைகளில் சரியான நீர் நிர்வாக முறைகளை கையாண்டு உபயோகிக்க வேண்டும் என்கிறார்.

மக்கள் தொகை அதிகரித்தால் அவர்களின் தேவைக்கேற்ற நீர் கிடைப்பது அரிதாகி விடும் என்கிறார்.

தொண்டு நிறுவனங்கள், விரிவாக்கப் பணியாளர்கள் நீர் நிர்வாகப் பயிற்சியில் பயன்பெற்று மக்களுக்கு குறிப்பாக கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் நிர்வாக மேம்பாட்டு வழி முறைகளைச் சொல்லிச் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.//

நாளைய சந்ததியினருக்கு சொத்துச் சேர்த்து வைப்பது மட்டும் நம் கடமை அல்ல, நீர் வளத்தை மேம்படுத்திக் கொடுப்பதும் நம் கடமை ஆகும்.
இன்று நமக்கு மட்டும் என்பது போல் தண்ணீரை அதிகமாய் செலவழித்தால் நாளை நம் குழந்தைகள் தான் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அதை மனதில் கொண்டு தண்ணீரை சிக்கனமாய் செலவு செய்து அவர்கள், அவர்களின் குழந்தைகள் என்று எல்லோரும் வளமாய் வாழ வழி செய்வோம். ஏரி, குளங்களில் அமைத்த மனைகளையோ, வீடுகளையோ வாங்குவது இல்லை என்று இந்த ஆண்டு உறுதி மொழி எடுத்துக் கொள்வோம் . அப்படி உறுதி மொழியை நாம் நிறைவேற்றினாலே வரும் சந்ததியினர் நலமாக, வளமாக வாழ்வார்கள்.

நாம் மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம். நீர் வளம் பெற்று வளமாக இருப்போம்.
நீர் வளம் பெற வாழ்த்துவோம்.

வாழ்க வளமுடன்!

* * * * *

மண் மரம், மழை என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. வின்சென்ட் அவர்கள் உலக நீர் நாளுக்காக அவரவ்ர்கள் பதிவு எழுதி விழிப்புண்ர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். போன முறை எழுதி அனுப்பினோம்.

அவர் அழைப்புக்கு இணங்க, பதிவர்கள் எழுதிய கட்டுரைகள் கீழே இருக்கும் சுட்டியில் படிக்கலாம்.

http://maravalam.blogspot.in/2010/03/blog-post_10.html



நீர் சிக்கனத்தைப் பற்றிய காணொளியை திரு.வின்சென்ட்
இதில் போட்டு இருக்கிறார் அவசியம் பாருங்கள்.

நீர் மேலாண்மை பற்றிய பதிவு படியுங்கள்
தண்ணீர் தூய்மைக்காக 17,000 கி,மீ நடந்த 63 வயது பெண்மணியைப் பற்றி எழுதி இருக்கிறார் படியுங்கள்.


ஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார் படித்துப் பாருங்கள்.
எல்லாமே சுற்றுசூழல், நீர் மேலாண்மை தான்.

கோமதி அரசு: ’திருமதி பக்கங்கள்’ என்ற வலைத்தளம்

தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’


உலக தண்ணீர் தினம் என்ற தலைப்பில் மணிராஜ் என்ற வலைதளம் வைத்து இருக்கும் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் அருமையான படங்களுடன் நிறைய செய்திகள் சொல்லும் கட்டுரை படியுங்கள்.



மழை நீரைச் சேமிப்பது காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் பெட்டகம் என்ற வலைத் தளம் வைத்து இருக்கும் திரு முகமத் அலி அவர்கள் எழுதிய கட்டுரை படியுங்கள்.

செவ்வாய், 20 மார்ச், 2012

உலகச் சிட்டுக்குருவிகள் தினம்











இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடு இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசி இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞ்ன் இல்லை. பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் நீ திருவனந்தபுரத்தில் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள். உனக்கு ஏன் அடைக்கலக் குருவி என்று பெயர் வந்த்தது என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு. ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.

மூடர்களிடம், முட்டாள்களிடம் மல்லுக்கட்டக் கூடாது என்று உன் கதையை சிறுவர்களுக்குப்

பாடாமாக்கினார்கள். அந்தக் கதை உனக்குத் தெரியுமே, இருந்தாலும் கேள்! ஒருநாள் சோவென்று பெருமழை பெய்தது. காற்று சுழற்றி அடித்தது. அப்போது நீகூடு கட்டி வாழும் மரத்தின் அடியில் ஒரு குரங்கு வந்து மழைக்கு ஒதுங்கியது. அப்போது நீ சும்மா இருக்காமல் அந்த குரங்கைப் பார்த்து உனக்கு வசிக்க வீடு இல்லையா நீ வீடு கட்டிக் கொள்ளலாமே எங்களை போல், என்று கேட்டாய் உடனே கோபப்பட்ட குரங்கார், ஊசிமூஞ்சி மூடா! எனக்கு கூடு கட்டத் தெரியாது ஆனால் கூட்டைப் பிய்த்து எறியத் தெரியும் என்று உன் கூட்டை பிய்த்து எறிந்து விட்டது.

பாங்க் விளம்பரத்தில் குருவியைப்போல் சேமிங்க என்று சொல்வார்கள். சிட்டுப் போல் சுறு சுறுப்பாய் இருக்கா பெண் என்று சுறு சுறுப்பான பெண்ணைப் பார்த்துச் சொல்வார்கள்.
சின்ன அழகான பெண்ணைப்பார்த்து சின்னச் சிறிய சிட்டாட்டம் இருக்கா பெண் என்று வர்ணிப்பார்கள்.

எங்கள் வீட்டு அலமாரியில் உள்ள கண்ணாடியில் உன் முகத்தைப்பார்த்து, அது வேறு குருவி என்று நினைத்துக் கொத்தி கொத்திப் பார்ப்பாய். என் அம்மா உன் அலகு வலிக்குமே என்று நீ அடுத்தமுறை வருவதற்குள் அலமாரி கண்ணாடிக்குத் திரைச்சீலை தைத்து மாட்டி விட்டார்கள்.

தூத்துக்குடியில் நாங்கள் இருந்த போது முன் அறையில் மாட்டி இருக்கும் படத்துக்குப் பின் வந்து வைக்கோலால் கூடு கட்டினாய். மின் விசிறி ஓடும் போது குறுக்கே குறுக்கே போகிறது, மின் விசிறியில் அடிபட்டு செத்து விடும் என்று என் அப்பா கவலைப்பட்டு நீ வரும் போது மின் விசிறியை அணைப்பார்கள்.

நான் இருக்கும் ஊரில் இப்போது தவிட்டுக் குருவி என்று சொல்லும் குருவிகள் தான் இருக்கிறது. உன் இனம் இல்லை.

என் மகள் ஊரிலில்(டெல்லி) உன்னைப்பார்த்ததும் எனக்கு எவ்வளவு ஆனந்தம்! போன முறை போனபோது நிறைய இருந்தார்கள் உன் சுற்றத்தார். இப்போது குறைந்து விட்டது உன் இனம்.

அங்கு மகளின் வீட்டுக்கு பின்புறம் நீங்கள் ஆனந்தமாய் மண் குளியல் செய்த போது எடுத்த படங்கள் எங்களுக்கு ஆனந்தத்தை இப்போதும் தருகிறது.





உணவு வைக்கும் மண் தொட்டியில் வந்து அமர்வாய். உன்னை போட்டோ எடுப்பதற்குள் சிட்டாய் பறந்து விடுவாய்.


என் மகன் வாழும் ஊரில்(நியூஜெர்சியில்) உனக்குக் கூடு கட்ட அழகாய் வீடு இருக்கு, புதர் போன்ற மரம் இருக்கு, நீ ஆனந்தமாய் சுதந்திரமாய் கீச் கீச் என்று ஒலி எழுப்பி பறந்தாய். நாங்கள் போன இடம் எல்லாம் உன்னைப் பார்த்தோம் அங்கு உள்ள சரவணபவன் ஒட்டலில் கூடு கட்ட முயன்று கொண்டு இருந்தாய்.

எங்கள் மயிலாடுதுறையில் முன்பு ரயில்வே சரக்கு ஏற்றும் இடங்களில் நெல்மணியை கொத்தவருவாய். இப்போது உனனை பார்க்க முடியவில்லை.
மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

உன்னை மீண்டும் கண்டால் குழந்தையை போல குதூகலிப்பேன். அந்த நாள் மீண்டும் வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படும் அடைக்கலப் பொருளாய் ஆகிவிடாதே!


NationalMuseum of Natural Science,Washington.



சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு என்று பாடிய கவிஞன் இன்று சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு என்றுதான் பாட வேண்டும் .

பூலோகம் எங்கும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடும் நாளை எதிர்பார்க்கும் மனது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறது, ஊர்க் குருவியைக் காப்பாற்று என்று.

திங்கள், 5 மார்ச், 2012

அந்த நாளும் வந்ததே




தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி உள்ள ரேடியோ தான்.

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது. இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை வரிசையை நன்கு கேட்க முடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !

முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த நாளும் இப்போது மீண்டும் வந்து விட்டது மின்சாரப் பற்றாக்குறையால.

வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.

குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார்.

எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு இருக்கிறது.


வானொலி நிலயம்.டில்லி

பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில்
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள். ஒரு பெண் காதலனை நம்பி வீட்டை விட்டு வந்து அவனால் கைவிடப் பட்டு, வீட்டுக்கு வந்தபோது, குடும்பமானத்தை வாங்கி விட்டாய் என்று புறக்கணிக்கும் பெற்றோர்..அபலையாகிய அவள் பிச்சை எடுக்கும் நிலை. பின்பு அவள் ,பணம் படைத்த நல்ல உள்ளம் படைத்த முதிய தம்பதிகளால் ஆதரிக்கப்பட்டு, அவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்துகொண்டு, தையல் கலை படித்து, தையல் கலையில் சிறந்து விளங்கி வாழ்வில் நலம் பெறுகிறாள். அந்தப் பெண்ணை ஆதரித்தவர்களின் குழந்தைகள் அயல் நாட்டில் இருக்கிறார்கள். பாசத்துக்கு ஏங்கிய அவர்கள் அந்த பெண்ணைத் தங்கள் மகள் போல் அன்பு செலுத்தி ஆதரிக்கிறார்கள். நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.

மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.

மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர் கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார்.
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள்.

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள்.

“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..

“பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள்

“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.


எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்



வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:

முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள்.

‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.


நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.


வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.


‘இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம். டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது.
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.


நான் பிறந்த வருஷம் (1954), அவர் இலங்கை வானொலி நிலையத்திற்கு வேலைக்கு வந்து இருக்கிறார் !


இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.

அது ஒரு பொற்காலம் !

சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.


தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று

இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.


வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி.

மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை
திரும்பியதில் மகிழ்ச்சிதானே!

படங்கள் உதவி: கூகிள்