செவ்வாய், 31 ஜனவரி, 2012

திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்



திருமங்கையாழ்வார் மங்களாசாசன வைபவம்
(எம்பெருமான் மீது திருப்பாசுரம் பாடியருளல்)
(திருவெள்ளக்குளம்)
25. 1. 2012

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள் வலியால்
மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் - (தனியன்)

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடிஉய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிநான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கையாழ்வார்.

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி
அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை
நடக்கும். இந்த ஆண்டு 23.01.2012, 24.01.2012,
25.01.2012 ஆகிய நாட்களில் நடைபெற்றது. முதல்
நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து
புறப்பட்டு ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,
11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும்
விழா நடைபெறும். அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் ஹம்ஸவாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை
யாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு திருக்குறை
யலூர், திருமங்கைமடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி
ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள்
குளி மண்டபம் எழுந்தருளுவார்.அங்கு திருநறையூர்
நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகியமணவாளனையும்
மங்களாசாஸனம் செய்த பிறகு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும். அருகில்
இருக்கும் நதியில்இருந்து நீர் எடுத்து வந்து
திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருமஞ்சனம்
முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார்
குமுதவல்லிநாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக்கொள்கிறார். தன்னைக் கடைத்
தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த
வஸ்திரத்தை அணிந்துகொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து
புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப்
பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் - ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய்கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றியம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா
சாஸனம் செய்துமுடித்து இரவு மணிமாடக்கோயி
லுக்கு எழுந்தருளிய பின் அர்த்தஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில்
மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி
மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப்பெருமாள் ஸந்நிதியில்
எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம்
செய்வார். மாலை பதினொரு திவ்யதேசத்து
எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை
பெறும். இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட
சேவையும், ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ
வாஹன உத்ஸவமும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.



நாங்கூர் மணிமாடக்கோயில்



மூன்றாம் நாள் காலை மணிமாடக்கோயிலில்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.பிறகு
காலையில் 11 மணியளவில் புறப்பட்டு திருவெள்ளக்
குளம், திருததேவனார்தொகை, திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம்
செய்து திருநகரி சேர்வார். இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

***

நாங்கள் கருடசேவையை முன்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால் திருமங்கையாழ்வார் 11 திவ்யதேசங்களை
மங்களாசாஸனம் செய்வதைப் பார்த்தது இல்லை.
25.01.2012 அன்று திருவெள்ளக்குளத்தில் ஆழ்வார்
மங்களாசாசனம் செய்யும் வைபவத்தைப் பார்க்கப்
போனோம். மூன்றாம் நாள் உற்சவத்தைப் பார்த்து
வந்தோம்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் முதலில்
திருப்பாவை படித்தார்கள். அதன் பின் சர்க்கரைப்
பொங்கல், தயிர்சாதம் பிரசாதம் தந்தார்கள். பின்
திருமங்கையாழ்வார் பல்லக்கில் மனைவியார்
குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டார்.


பாண்டு வாத்தியம், மேளம், இவற்றோடு அண்ணன்
கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார். நாங்களும்
போனோம்




தெருவெல்லாம் வீடுகளில் கோலங்கள்
போட்டு அவரை சிறப்பாய் வரவேற்றனர்.
திருமங்கையாழ்வாரின் வடிவழகை ஸ்ரீ மணவாள
மாமுனிகள் வருணித்துப் பாடுகிறார். அப்படி ஒரு
அழகு. அவர் கையில் வைத்து இருக்கும் வேல்
போன்ற ஆயுதத்தில் சிவப்பு கற்களால் அழகூட்டப்
பட்டுள்ளது. குமுதவல்லித் தாயார் கையில் உள்ள
கிளிக்கும் சிவப்புக்கற்களால் அழகூட்டப்பட்டுள்ளது
.



பல்லக்கும் அழகு! அதைத் தூக்கி வருபவர்களுக்கு
பச்சைக் கலரில் பனியன் வழங்கி இருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமாய் தங்கள் பைகளை பல்லக்கின்
இரு புறமும் மாட்டி கொண்டு சந்தோஷமாய்
பல்லக்கை தூக்கி வருகிறார்கள்.



பல்லக்கு தூக்கி வரும் அடியார்களும் ஆழ்வார்கள்
தான் என்று அங்கு உபன்யாசம் செய்தவர் சொன்னார்.

***

அண்ணன் கோயில் சிறிய அழகிய கோயிலாக
உள்ளது.

திருக்கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலை அண்ணன் பெருமாள் கோயில்
என்பார்கள்-நாங்கூர்க்கோயில்களில் ஒன்று – இந்த
இடத்தை மேலச்சாலை என்று கூறுகிறார்கள்.

* மூலவர் திருநாமம்:
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன்,
அண்ணன் பெருமாள்.
* நின்ற திருக்கோலம்,
* கிழக்கே திருமுக மண்டலம்.
* தாயார் திருநாமம் :
ஸ்ரீ அலர்மேல் மங்கை,
ஸ்ரீ பூவார் திருமகள் நாசசியார். பத்மாவதி
* தீர்த்தம்: திருவெள்ளக்குளம்,ஸ்வேத புஷ்கரிணி
* விமானம்-தத்வத்யோதக விமானம்
* மங்களாசாசனம்- திருமங்கையாழ்வார்
1308-17(10 பாசுரங்கள்)
இத்தலத்து இறைவன் சுவேதராஜாவிற்கு இறவா
வரம் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துப்
பெருமாள் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்பர்.
திருப்பதி பெருமாளுக்கான பிரார்த்தனையை இங்கும்
செலுத்தலாம் என்கின்றனர்.

நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், சேலார்
வயல்சூழ் திருவெள்ளக்குளம்,செந்தாமரை நீர்த்
திருவெள்ளக்குளம்,தேனார் பொழில்சூழ்
திருவெள்ளக்குளம் என்றெல்லாம் ஆழ்வார்
பாடுகிறார்








கோவிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில்
நீராழி மண்டபத்திற்குரியமேடை இருக்கிறது.
மண்டபம் தற்போது இல்லை. இரை தேடும் கொக்கு
அங்கே அமர்ந்திருந்தது. உச்சி வேளை வெயிலைத்
தாங்க முடியாத எருமைகள் திருக்குளத்தில் ஆனந்த
மாய் மூழ்கி இருந்தன.



ஆழ்வார் திருவெள்ளக்குளம் திருக்கோயிலை வலம்
வருகிறார்



ஆழ்வாரை மேளதாளத்துடன் வரவேற்கிறார்கள்
திருமங்கையாழ்வார் கோயிலுக்கு முன்னே
வந்ததும் உள்ளே இருந்து ஸ்ரீ அண்ணன் பெருமாள்
சூடிய மாலை,அவர் உடுத்திக் களைந்த ஆடை
இவற்றைக்கொண்டு அவருக்குத் தந்து மரியாதை
செய்கிறார்கள். அவர் கோயிலுக்கு உள்ளே வர
நடை பாவாடை விரித்து அழைக்கிறார்கள்.





திருமங்கையாழ்வார் எழுந்தருளுவதை ‘வாங்கா’
வாத்தியம் எல்லோருக்கும் அறிவிக்கிறது


பின்னர் ஆழ்வார் திருக்கோயிலின் உள்ளே
அடியார்களுடன் எழுந்தருள்கிறார்.

அதன்பின்னர் மூலஸ்தானத்தருகே மங்களா
சாசனம் நிகழ்கிறது.

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர்
திண்ணார் மதில்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே


என்று தொடங்கி அவர் பாடிய 10 திருப்பாசுரங்களை
பட்டாச்சாரியர்களும் பிறரும் சந்நிதியில்
பாடுகிறார்கள். கேட்டு அனுபவித்தோம்.

இந்த திவ்ய தேசத்தில் பல்லக்கு மூலஸ்தானத்தின்
அருகிலேயே போய் விடுகிறது. அந்த மண்டபத்
திற்குள் அந்தச்சமயத்தில் பெண்கள் போக அனுமதி
இல்லையாம். போட்டோ எடுக்கவும் அனுமதி
யில்லையாம்.

அந்தக் காலத்தில் திருமங்கையாழ்வார் பல்லக்கில்
எப்படி வயலிலும், சேற்றிலும், ஆற்றிலும் இறங்கி
நடந்து வந்து பெருமாள் கோயில்களுக்கு வந்து
திருப்பாசுரங்கள் பாடினாரோ அப்படியே அதை
இப்போது உத்சவமாக நடத்திக்காட்டுகிறார்கள்.

திருவெள்ளக்குளத்தில் மங்களாசாசனம் முடிந்ததும்
ஆழ்வார் திருத்தேவனார் தொகை, திருவாலி ஆகிய
தலங்களில் மங்களாசாசனம் செய்து திருநகரி
அடைகிறார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
_________

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஸ்வயம்புநாத் கோயில் காத்மாண்டு


Swayampunath temple (stupa)
ஸ்வயம்புநாத் கோயில்(ஸ்தூபி)
காத்மாண்டு

நாங்கள் காத்மாண்டில் தங்கியிருந்த
போது 20.09.2011 அன்று காத்மாண்டு
நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில்
உள்ள சுவயம்புநாத் கோயிலுக்குச்
சென்று வந்தோம்.

காத்மாண்டு பெரிய நகரமாய்
இருக்கிறது. அகன்ற சாலைகள்,
கடைவீதிகள், மால்கள், வணிக
நிறுவனங்கள், அரண்மனை, அருங்
காட்சியகம், பூங்காக்கள், கோயில்கள்
என ஒரு தலைநகருக்கு உரிய எல்லா
அம்சங்களும் பொருந்தியுள்ளது.












சுறுசுறுப்பாக மக்கள் இயங்குகிறார்கள். நேபாளத்
துக்கே உரிய அந்த வித்தியாசமான தொப்பிகளை
ஆண்கள் அணிகின்றார்கள். பல வண்ணங்கள்,
டிசைனில் அந்தத்தொப்பிகள் இருக்கினறன. பேருந்து
களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிலசமயங்களில்
பேருந்தின் மேற்கூரைகளில் கூடப் பயணம் செய்
கிறார்கள்.



வாடகை கார்கள், டெம்போக்கள் உள்ளன.
வாடகைக்கார்களில் அதிகமாக மாருதி 800 கார்களே
உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளைப் பார்த்த
வாறே சென்றோம்.


தர்பார் மார்க் (durbar marg)
ஒரு முககியப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதி
யில் நிறைய வங்கிகள் உள்ளன. ஸ்டேட் பாங்க்
ஆப் இந்தியாவின் கிளை, ஏடிஎம் ஆகியவை இங்கு
உள்ளன. இதில் நேபாள ரூபாய்க்கு ஒரு நாளைக்கு
அதிகபட்சம் பத்தாயிரம் , ஏடிஎம்மில். நம் கார்டை
வைத்து எடுக்கலாம். நேபாள ரூபாய் இந்திய
ரூபாயைவிட மதிப்பு குறைவு. நகரில் கடைக்
காரர்கள், சைக்கிள் ரிக்க்ஷாகாரர்கள், இந்திய
ரூபாயைக் கொடுத்தாலும் விகிதத்தைக் கணக்கிட்டு
வாங்கிக் கொள்கிறார்கள். பணமாற்றம் செய்யும்
கடைகள் இங்கு நிறைய உள்ளன. அமெரிக்க டாலர்,
இந்திய ரூபாய், நேபாள ரூபாய், சீன யுவான்
இவற்றை ஒன்றிலிருநது மற்றொன்றிற்கு மாற்றிக்
கொளளலாம். பணமாற்ற விகிதத்தை கடைக்கு
வெளியே பட்டியலிட்டு வைத்திருக்கின்றனர்.

கலைப்பொருட்களை விற்கும் கடைகள் நிறைய
உள்ளன. எச்சரிக்கையாக இல்லாவிட்டால் சிலர்
ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு கடையில் கலைப்
பொருள் வாங்கியபோது, கடைக்காரர் நாங்கள்
கொடுத்த பணத்தில் ஒரு நூறு ரூபாயை மறைத்து
வைத்துக் கொண்டு குறைவாய் கொடுத்து இருப்ப
தாகக் கூறி இன்னும் ஒரு நூறு கொடுக்கவேண்டும்
என்றார். உடன் வந்த திரு. ராஜேந்திரன் அவர்
களுக்கு இந்தி நன்கு தெரியும். அவர் ’நாங்கள்
இவ்வளவு செலவு செய்து உங்கள் ஊருக்கு வந்து
இருக்கிறோம். நூறு ரூபாய் ஏமாற்ற வேண்டிய
அவசியம் இல்லை. எங்கள் ரூபாய் உன் பெட்டியில்
இருக்கும் பார்’ என்ற பின் கடை முதலாளி பார்த்து
விட்டு சரி சரி என்றார். தன் தவறுக்கு மன்னிப்புக்
கோரவில்லை. இப்படியும் சில மனிதர்கள்!

காத்மாண்டு நகரின் மேற்குப் பகுதியில் ஒரு மலை
மீது அமைந்துள்ளது, சுயம்புநாத் கோயில்.
கோவிலுக்குச் செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு.
அடிவாரத்தில் புத்த ஸ்தூபிகள் சிறிய அளவில்
உள்ளன. கண் உருவம் ஓவியமாக வரையப்
பட்டுள்ளது.



தோரணங்கள் நிறையக் கட்டப்பட்டுள்ளன. கீழே ஒரு
தடாகம் கட்டப்பட்டுள்ளது. உலக அமைதியின் அடை
யாளமாக இது உள்ளது.




மேலே கோவிலுக்குச் செல்ல இரண்டு வழிகள்
உள்ளன. ஒன்று வலது புறமாகப் படிப்பாதையாக
உள்ளது. மற்றொரு பாதை கார் செல்லும்படியாக
இடது புறமாகச் செல்லுகிறது. நாங்கள் படிப்
பாதையில் சென்றோம். பழனிப்படிக்கட்டுகள் போல
உள்ளன. படிகளில் யாசிப்பவர்கள் உட்கார்ந்திருக்
கிறார்கள். அவர்களிடம் பன்னாட்டு கரன்சிகள்,
நாணயங்கள் உள்ளன. அவர்களிடமும் நாணயத்தை
மக்கள் மாற்றிக் கொள்கின்றனர்

படிகள் மொத்தம் 365. மலைமீதேறிக் கோயிலை
அடைந்தோம். இக்கோயிலை குரங்குக்கோயில் என்று அழைக்கிறார்கள்
முதலில் வஜ்ராயுதம் நம்மைக் கவர்கிறது/அச்சுறுத்து
கிறது? தங்க நிறத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.
ஒரு மேடையின் மீது வைக்கப்பட்டுள்ளது.



கோயில் பரப்பின் நடுவில் மிக உயர்ந்து ஸ்தூபி
விளங்குகிறது. புத்தரின் இரு அருட்கண்கள் மேலே
உள்ள சதுரப்பகுதியின் நான்கு பக்கங்களிலும் அழகாக
வரையப்பட்டுள்ளது. ஸ்தூபியின் மீது மஞ்சளால்
அபிஷேகம் பண்ணுகிறார்கள். ஸ்தூபியின் நான்கு
புறங்களிலும் புத்தருக்கு தங்க நிறத்தில் சந்நதிகள்
உள்ளன. அங்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.
ஊதுவத்தி வைக்கிறார்கள்









மிகுந்த வேலைப்பாட்டுடன் உள்ளன. சிங்கம்
போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்கள்
உள்ளன. வெண்கலமணிகளும் நிறைய உள்ளன.

கோயில் வரலாறு கூறும் பெரிய கல்வெட்டு ஒன்று
உள்ளது. பலகடவுள் உருவங்கள் உள்ள சிறு சிறு
கோயில்கள் இங்கே உள்ளன.



இக்கோயிலின் ஒருபுறத்தில் சீதளாதேவி அம்மன்
கோயில் உள்ளது. இங்கே நிறைய இந்துக்கள்
வந்து வழிபடுகின்றனர். பூசைக்குத்தேவையான
பொருட்களை விற்கும் சிறிய கடைகள் பக்கத்தி
லேயே உள்ளன. வலமாகச்சுற்றி வரும்போது
புத்தருக்கான ஒரு சந்நிதி மிகப்பெரிதாக உள்ளது.
பெரிய புத்தர் சிலை உள்ளது.




பெளத்த பிக்‌ஷுக்கள் அங்கு வழிபாடு
முதலியவற்றை நிர்வகித்து வருகிறார்கள்.
சுயம்புநாத் கோயிலில் இருந்து பார்த்தால்
காத்மாண்டு நகர் கீழே அழகாகத் தெரிகிறது.





தரிசனம் முடிந்து மலையைவிட்டுக் கீழே
இறங்கினோம்.அங்கே வாயில் அருகே கலைப்
பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. சில
கலைப்பொருட்களை வாங்கினோம் புத்தரின்
முகங்கள், அம்பாளின் முகங்கள்(தாரா தேவி),
பசுபதிநாத் கோயிலில் உள்ள இறைவனின் சிறிய
உருவச்சிலைகள், மணிகள் இன்னும் பலபொருட்கள்
இங்கு கிடைக்கின்றன.

தாராதேவியின் சிலைகள் (வெண்கலத்தில்) வீணை
வாசித்துக் கொண்டிருப்பது போல் விடுதிகளின்
வரவேற்பறைகளில் அழகாய்க் கொலுவீற்றிருக்கிறது.

பின்னர் டாக்சியில் ஏறி காத்மாண்டு திரும்பினோம்.
சுயம்புநாத் கோவில் வழிபாடு இப்படி இனிமையாக
நிறைவேறிற்று.
_____________________________________

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்





ஸ்ரீ தக்ஷிணகாளி கோயில் - நேபாளம்
Shri Dhakshina Kali Temple - Nepal


திருக்கயிலாய யாத்திரை சென்றிருந்த நாங்கள் திரும்பும்
போது காத்மாண்டிலிருந்து முக்திநாத் சென்றுவந்தோம்.
21.09.11 அன்று தான் காத்மாண்டிலிருந்து டெல்லி
திரும்ப விமானடிக்கட் வாங்கியிருந்தோம். எனவே
19ஆம் தேதியுடன் நாங்கள் திட்டமிட்ட இடங்களைப்
பார்த்து முடித்து விட்டபடியால் அங்கு இருக்கவேண்டிய
ஒரு நாளாகிய 20.09.11 அன்று எங்களில் நால்வர்
மட்டும் ஏதாவது இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பி
தனியாக டாக்ஸி ஏற்பாடுசெய்து போய் வந்தோம்.
அப்படிச்சென்ற இடங்களில் தட்சிணகாளி கோயிலும்
ஒன்று.

இக்கோயில் நேபாளத் தலைநகர் காத்மாண்டில் இருந்து
தென்கிழக்கில் 22 கி.மீ தொலைவில் உள்ளது.

அழகிய மலைப்பாதை. ஆங்காங்கே கிராமங்கள். அழகிய
பாரம்பரிய வீடுகள். வாழைத்தோட்டங்கள், மக்காச்
சோளத்தோட்டங்கள் காணப்படுகின்றன.






வீடுகளில் பரண்
அமைத்து சோளக்கதிர்களை நிறையக்கட்டிக் காயவைக்
கிறார்கள். சிறிய வீடாக இருந்தாலும் மாவிலை கட்டு
வதைப்போல கட்டிவைக்கிறார்கள். அழகழகாய் கட்டிக்
காயவைக்கிறார்கள்.சோளக்கதிரின் மேல் தோலியை
அழகாய் விரித்து மூன்று மூன்றாய் பூ கட்டுவது போல்
கட்டி அதைத் தோரணமாய் கட்டி இருப்பது அழகாய்
இருக்கும். டாக்ஸி வேகமாய் போனதால் சிலவற்றை
போட்டோ எடுக்க முடியவில்லை.அன்னாசிப் பழங்களை
வெட்டிக்காய வைக்கிறார்கள்.

தூரம் அதிகமில்லை என்றாலும் மலைப்பாதையில்
செல்ல ஒருமணி நேரம் ஆகின்றது. கோயில் ஒரு
தனிமலை மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடல்
மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்
கிறது. அடிவாரத்தில் பார்ப்பிங் (Pharping) என்ற
சிற்றூர் உள்ளது. பேருந்துகள் காட்மாண்டுவில்
இருந்து இங்கு வந்துபோகின்றன.

நாங்கள் அங்கு சென்றதும் நல்ல மழை பிடித்துக்
கொண்டது. ஒரு சிறிய உணவகத்தில் ஒதுங்கினோம்.
இன்னும் நீண்டதூரம் போகவேண்டுமே. நல்லவேளை
யாக அங்கிருந்த சாது ஒருவர் எங்களுக்குக் குடை
கொடுத்து உதவினார்.

அரை கி.மீ மலையேற வேண்டும்.வழியில் பூக்கடைகள்,
மணிகள் விற்கும் கடை, உணவகங்கள் என்று நிறைய
கடைகள் இருக்கின்றன. மலையில் சிறிது தூரம் ஏறிச்
சென்ற பின் நடுவில் சுமார் 100 படிகள் இறங்கி ஆற்றுப்
பகுதியை அடைந்து மீண்டும் சுமார் 275 படிகள் மேலே
ஏற வேண்டும்.

கீழே இருந்து இந்த இடத்திற்கு வர சுமாரான சாலை
உள்ளது. சாலை வேலை நடை பெறுகிறது. பஸ்,
டாக்ஸிகளை கீழேயே நிறுத்தி விடுகின்றனர்.

பூர்ணாவதி கங்கா, உத்தார்சதி கங்கா என்ற பெயருடைய
இரண்டு ஆறுகள் இந்த இடத்தில் ஒன்றாகச் சேர்கின்றன.



பூர்ணாவதி கங்கா




உத்தார்சத்தி கங்கா



கங்கா


இந்த இடத்தில் ஜ்வாலாமுகி கோயில் இருக்கிறது.கட்டி
விடப்பட்ட வெண்கல மணிகள் கொத்துக்கொத்தாக
உள்ளன.சிங்கம் போன்ற விலங்குகளின் வெண்கல
உருவச்சிலைகளையும் வழிபடுகின்றனர்.இறைவியின்
மீது குங்குமம் அரிசி போன்றவற்றைத் தூவுகிறார்கள்


இங்குள்ள மக்கள் தங்கள் உபயோகத்திற்கு மூங்கில்
கூடைகளைப் பயன்படுத்துகின்றனர். அதில் வீட்டுக்கு
வேண்டிய பொருட்களை வாங்கி முதுகில் சுமந்து
வருகிறார்கள்.



மலைப் பகுதியில் அப்போது தான்
பாரத்தை எளிதாக கொண்டு வர முடியும் என
நினைக்கிறேன். கடைகளில் அந்த மூங்கில் கூடைகள்
சின்னது , பெரியது என்று கிடைக்கிறது. மேலே
அகன்று கீழே குறுகி இருக்கும் அந்த மூங்கில் கூடை.
பெண்கள் நல்ல பலம் பொருந்தியவர்களாய்
இருக்கிறார்கள். கேஸ் சிலிண்டர்களைக் கூட
முதுகில் சுமந்து பஸ்ஸில் ஏறி இறங்குகிறார்கள்.



வெண்கலச்சிலைகள்





வழிபாடு


பொரி, அவல், கொண்டக்கடலை போன்றவற்றை
தக்ஷிணகாளிக்குப் படைப்பார்களாம். இவற்றை இங்கு
கடைகளில் வாங்கிக் கொண்டு மேலே செல்லலாம்.



மணிகள்




மழையிலும் பூ வியாபாரம்




கடைகள்






மீண்டும் மலையேறல்




மேலும் கொஞ்சதூரம் ஏறிச்சென்றால் தக்ஷிணகாளி
கோயிலை அடையலாம். வழியில் இருபக்கங்களிலும்
அடர்த்தியான மரங்கள்.





நெருங்கிவிட்டோம்கோயிலை





மூலஸ்தானம்





சிறிய கோயில். சுற்றிவரலாம்.அம்பாளின் உருவம் ஒரு
சிவப்புத்துணியால் மூடப்பட்டுள்ளது. பாதங்கள்,முகம்
தெரிகின்றன. இங்கு வரக்கூடிய பக்தர்கள் மெழுகுவர்த்தி
ஏற்றி வழிபடுகிறார்கள். இதற்காக அங்கு மெழுகு
வர்த்திகள் விற்கப்படுகின்றன.

காளி அசுரரைகளைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக்
குடித்த இடமாம் இது. அமைதியான இடத்தில் அமைந்த
அக்கோயிலில் காளிதேவியை வணங்கினோம்.

இங்கு புறாக்கூண்டுகள் உள்ளன. இங்கும் பெரியதும்
சிறியதுமான பலவேறு மணிகள் கட்டப்பட்டுள்ளன.
பூனைகள், குரங்குகள் உள்ளன.



புறாக்கூண்டு













மணிகள்














கோயில்



மலையிலிருந்து கீழே இறங்கும்போது மழை நின்று
விட்டது. டாக்ஸியில் ஏறி மதியநேரத்தில் காத்மாண்டு
வந்து சேர்ந்தோம்.

_________________________