ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

எங்கள் வீட்டு விநாயகர்



சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தாய்மை





”பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறென்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு”

தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்
ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற தெய்வம் குடிகொண்டுள்ளது. ஒவ்வொருவரும்
அந்த குடியிருந்த கோயிலை மறக்க முடியாது - மறக்கக் கூடாது,

மாதா,பிதா,குரு, தெய்வம் என்று சொல்வார்கள். முதல் இடம் தாய்க்குத்தான்.
மாதா சொல்லித்தான் மற்றவர்களை நமக்குத் தெரியும்.
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,’தாயிற் சிறந்த கோயிலும்
இல்லை.’என்றெல்லாம் தாயின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம்.

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' என்றார் திருவள்ளுவர்.


போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.
எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும்
துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும்
இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை
சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன்
படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து
வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்கள்.
எல்லாப் பேரக்குழந்தைகளுக்கும் கோலம், சமையற்குறிப்பு , எம்பிராய்டரி
என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.

எனது மாமியார்

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

என்றார் திருவள்ளுவர். மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்றும் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்றும்
கூறினார். நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
மாமியாருக்கு முத்தம்மாள் என்ற பெயர் பொருத்தமுடையதாகவே உள்ளது.

முத்தம்மாள் பெற்ற நல்முத்துக்கள் ஐந்து. நல்லொழுக்கம், நல்ல இறை
நம்பிக்கை கொண்ட நல்ல மனிதராய்களாய் வளர்த்து ஆளாக்கியவர் அவர்.
ஐந்து மருமகள்களையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.எனது
மாமனாருக்கு நல்ல வாழ்க்கைத்துணையாக இருந்து வருகிறார்கள்.
இப்போது நூறு வயதான என் மாமனாருக்கு நல்லதொரு தாயாகி ஒரு
குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் வயது 85 ஆகிறது. தனது முதுமையால் ஏற்படும் உடல்
துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் கணவரை கண்ணும் கருத்துமாய்ப்
பாதுகாக்கிறார்.

விடுமுறைக்குப் பேரன் பேத்திகள் வந்தால் அவர்களுக்குப் பிடித்த பலகாரங்
களைச் செய்து அவர்களை மகிழ்விப்பார். இப்போது முதுமை காரணமாகப்
பழையமாதிரி செய்யமுடியாமற் போனாலும் ’நமக்கு முடியும்போது வருவார்
களா?’ என்று கேட்டுவிட்டு எளிதாகச் செய்யும் பலகாரங்களைச் செய்து
கொடுத்து மகிழ்வார்கள்.

பேரன் பேத்திகளோடு இக்கால அக்கால எல்லா உலக விஷயங்களையும்
பேசி அவர்களை மகிழ்விப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே
இல்லை என்று கூறலாம்.

எனது மகள்

எனது மகள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் . தன் குழந்தைகள் பல கலை
களிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று பாடுபடும் தாய். தன் குழந்தைகளுக்கு
எவ்வளவு விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு
விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். நடனம்,பாட்டு.
விளையாட்டு,பொது அறிவு ஆகியவற்றில் அவர்கள் சிறக்கச் செய்திருக்கிறாள்.
அதைப் பார்க்கும்போது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது போல் எனது மகள் என்னைக்
காட்டிலும் சிறந்த தாயாக விளங்குகிறாள்.

எனது மருமகள்

எனது மருமகளும் இப்போது ஒரு ஆண்மகவிற்குத் தாயாகி இருக்கிறாள்.
அவள் இருப்பது அமெரிக்காவில். அங்கு பிரசவ நேரத்தில் கணவனும் உடன்
இருக்கலாம். என் மகன் உடன் இருந்தான். சுகப்பிரசவம் என்று சொல்லி
கடைசி நேரத்தில் ஆயுதம் போட்டு என் பேரனை வெளியில் எடுத்தார்கள்.
திருச்சி தாயுமானவரே பிரசவம் பார்த்தது போல் ’ டாக்டர் தாய் ’எனது
பேரனை எனது மருமகளிடம் கொடுத்தார்கள்.

எனது மருமகள் டாக்டருக்கு தாய்மையின் சிறப்பை அற்புதமாய்க் காட்டும்
சிலையை(தாய் குழந்தையை மார்போடு அணைத்துக் கொஞ்சும் சிலை)
கொடுத்து ,’எனக்கு என் மகனைக் கொடுத்த தேவதை நீங்கள்’ என்று கண்ணீர்
மல்கப் பாராட்டியபோது, சிலையையும் என் மருமகளையும் அணைத்துக்
கொண்டு அவர்களும் கண்ணீர் மல்கியபோது தாய்மையின் சிறப்பு
தெரிந்தது.

என் மருமகளுக்கும் பிரசவத்தின் போது உதவிக்கு வந்திருந்த தன் தாயின்
மீது அன்பும் பாசமும் அதிகரித்திருக்கும்.

எனது மகன் பிரசவத்தின் சமயம் உடனிருந்ததால் அவனுக்கும் தாய்மையின்
சிறப்பு தெரிந்திருக்கும்.அவனுக்கும் அவள் மேல் பாசம் அதிகரித்திருக்கும்.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் குழந்தையைப் பார்க்கவரும் போது
அம்மாவைப் பார்த்து ’பெற்றுப் பிழைத்தாயா?’ என்று கேட்பார்கள்.
ஆம். பெற்றவளுக்கு அது மறுபிறவிதான்!

தாய்மை இப்படி பல உறவுகளில் பரிணமிக்கிறது!

பெண்வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே வளர்ந்தாய்
பெண்துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமையுணர்

தாய்மையைப் போற்றுவோம்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஆடிப்பெருக்கு





ஆடிப்பெருக்கு


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல் ஆறிருக்குமிடம்
எல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது . என்றாலும்
காவிரிக்கரைகளில் சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னிப்பெண்கள் நல்ல கணவரை அடையவும், புதுமணத் தம்பதியர்
தங்கள் வாழ்வு சிறக்கவும், மணமான பெண்கள் தங்கள் மணாளர்
நீண்ட ஆயுள் பெறவும் ஆற்றுமண் எடுத்துக் காவிரியம்மன்
உருவம் செய்து வழிபடுவார்கள்

ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் இதற்கு முந்தைய ஆண்டுகளில்
எனது மகள் , மகனோடும் அக்கம்பக்கத்தாருடனும் ஆற்றுக்குப்போய்
இவ்விழாவைக் கொண்டாடியதை நினைவுபடுத்திக்கொள்வேன்.

என்மகள் சிறுபெண்ணாக இருக்கும்போது கைகளிலும் கால்களிலும்
மருதாணி வைத்துக்கொள்வாள். தன் தம்பியோடு கடைக்குச்
சென்று வளையல் பாசிமணி ரிப்பன் தோடு என்று அவளுக்குப்
பிடித்தமானவைகளை வாங்கிவருவாள்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எம்.ஜி,ஆர் கடை என்ற கடையொன்று
உண்டு.அங்கு போய் தான் வாங்குவாள்,கொஞ்சம் பெரியவள் ஆனதும்
சரசுகடையில் நதியா வளையல்,நதியா தோடு, நதியா பாசி,என்று
வாங்கி வருவாள்.அவளுக்குப் பிடித்தது கருமணி தான்.இப்போது
திருமணமான பின்னும் அவளுக்குப் பிடித்தது கருமணிதான்.

சிறு பையன்கள் அவர்களே செய்த ஆடித்தேர்களை இழுத்து
வருவார்கள். என் குழந்தைகளும் கூடச் சென்று மகிழ்வார்கள்,

இப்போது காவிரியாற்றில் நல்ல தண்ணீரும் இல்லை. எனது
பிள்ளைகளும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்,
ஆற்றுக்குச் செல்ல பழைய நண்பர்களும் இல்லை.எல்லாக்
குழந்தைகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள்.

அதனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே காவிரியம்மனுக்கு
வழிபாடு செய்து நீர் நிலைகளில்அதைச் சேர்ப்பது மட்டும்
நடக்கிறது.

ஏரிகுளம் கிணறு ஆறுஎல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்








சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆடி வருகுது வேல்













ஆடி வருகுது வேல்!

ஆடி வருகுது வேல் சுற்றி நில்லாதே பகையே!



முத்தான முத்துக்குமரா முருகையா வாவா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தைமகிழ வாவா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதையா

பெங்களூர்  ரமணி அம்மா அவர்கள் பாடிய இந்த பாட்டைக்  கேட்கும் போதலெல்லாம்  மனக்கண்ணில்     ,வேலும், மயிலும் ஆடிவருவதும், மக்கள் கூட்டம் வரும் காட்சியும் விரியும்.. 

.

சமீபத்தில் நானும் என் கணவரும் விராலிமலை போயிருந்தோம்.

நாங்கள் அங்கு படியேறும்போது எங்களுக்கு முன் தோகைமயில் ஒன்று அழகாய்ப் படியேறிக் கொண்டிருந்தது.(அதற்கு முருகனிடம் என்ன பிரார்த்தனையோ? )

அப்போது  மழை  மேகம்  இருந்ததால்  இன்னொரு  மயில்  தன் தோகையை  விரித்து அகவியவாறு  ஆடியது. அது முருகனைப்   நினைத்து பாடியாடிதைப்  போல இருந்தது. இருந்தாலும்  அதன் பின்புறத்தைக்  காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், திரும்பியாடு முருகா என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.

நூறு மயில்களுக்கு மேல் அங்கிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. இங்குள்ள ஒரு பாறையில் அருணகிரிநாதருக்கு மயில் மீது வந்து முருகன் காட்சி  தந்தாராம். மலைமேல் உள்ள கோயிலில் ஆறுமுகர் வள்ளி , தெய்வானையுடன் காட்சி தருகிறார்.  அவரது மூன்று முகங்கள்  நேராகவும்  மூன்று  முகங்கள்  பின்புறமுள்ள கண்ணாடியிலும்  தெரிகின்றன.  புறக்கண்களால்
பார்க்கக் கூடிய மூன்று முகங்கள் நேராகவும், அகக்கண்களால் பார்க்கக் கூடிய மூன்றுமுகங்கள் கண்ணாடியிலும் தெரிகின்றன.

சூரனுக்குத் தூது சென்று விசுவரூப தரிசனம் கொடுத்த வீரபாகுவின் பெரிய உருவச்சிலைஉள்ளது.  அருணகிரிநாதர், விநாயகர்,சிவன், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு
உருவச்சிலைகள் உள்ளன.

மலையழகைக் காண்பதற்காகக் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் இருந்து  இயற்கை அழகைப்பார்க்கலாம்  என்றால்  குரங்குகள் நிறைய நின்றன .  இங்குக் குரங்குக் கூட்டத்தின் குறும்புகளைத் தான் காண முடிந்தது.

மரங்களிலும் பாறைகளிலும் மயில்கள் அமர்ந்த காட்சிகளைக் கண்டவாறே  மலையிலிருந்து  இறங்கினோம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------                                                              -வாழ்க வளமுடன்

கற்றல் நன்றே

” கற்றல் நன்றே கற்றல் நன்றே
வலைக் கல்வி கற்றல் நன்றே”

நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. விளம்பரத்தில்
’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின்
சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம கணிப்பொறி விளையாட்டு,
ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

அடுத்த குரு என் மகள். வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுத்தேன் அவளுக்கு. அவள்
எனக்கு வலைக் கல்வி கற்றுக் கொடுத்தாள்.

மகள்,மகன், மருமகள் எல்லோரும் நல்ல வலைத்தளங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.ஒரு மாதமேயான என் பேரனும் வருங்காலத்தில் எனக்குக் கற்றுக் கொடுப்பான்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.