புதன், 9 டிசம்பர், 2009

விசேஷமான நேரங்கள்


வாழ்க்கையில் தனிச் சிறப்பான விசேஷமான நேரங்கள் வரும். அவை ஒரு கனவைப் போல் கடந்து போய்விடும். அந்த நிமிடங்கள் மீண்டும் திரும்பிவர வாய்ப்பில்லை.ஆகவே,அவைவரும் போதே சிக்கென்று பிடித்துக் கொள்ள வேண்டும்.-இது அன்னையின் பொன்மொழி.

அப்படித்தான் மகளது ஊருக்கு(டெல்லி) போய் பேரன் பேத்தியுடன் இருந்த நேரங்களை விசேஷமான நேரங்களாய் கருதுகிறோம் நானும் என் கணவரும். அங்கு இருந்த 14 நாட்களும் சிட்டாய்ப் பறந்து விட்டன. குழந்தைகளுடன் இருந்த ஒவ்வொரு பொழுதும் இன்பமானவை.அன்னை சொன்னது போல் சிக்கென பிடித்துக் கொண்டோம்.

’நவம்பர் குளிர் இப்போது போகிறீர்களே குளிர் அதிகமாய் இருக்குமே,’ என்று கேட்டார்கள் இங்கு எல்லோரும். ’ஆனால் விடுமுறை இப்போது தானே எங்களுக்கு’ என்றார் என் கணவர். பேரக்குழந்தைகளைப் பார்த்து, அவர்களோடு இருக்கப் போவதை நினைக்கும் போது குளிர் என்ன செய்யும்? குளிருக்கு வேண்டிய ஆடைகள் அணிந்து வெற்றிகரமாய் குளிரை சமாளித்து வந்து விட்டோம்.(இனிமேல் அங்கு அதிக குளிர் வரும்.)

குளிர் சமயத்தில் அவர்கள் படும் துன்பத்தையும் பார்த்து வந்தோம்.பள்ளிக்குச் செல்லும் போது எத்தனை உடைகள்!பேத்தி 7 மணிக்கும், பேரன் 8 மணிக்கும் செல்வார்கள்.

அந்த குளிரில் போர்வைக்குள் இதமாய் படுத்துக் கொள்ளத்தான் சொல்லும் .அந்த குளிரில்  குழந்தைகளைப் பள்ளி பஸ் வந்து நிற்கும் இடம் வரை கொண்டு விட தாத்தா (என் கணவர்) ஆனந்தமாய் போனார்கள்,முதல் நாளே பஸ்ஸில் வரும் டீச்சரிடம்’ தாத்தா ஊரில் இருக்கும் வரை தாத்தாதான் வருவார்கள்’ என்று சொல்லிவிட்டானாம் என் பேரன்.


தினமும் காலை 8 மணிக்குப் பேரனைக்கொண்டு விட்டுவிட்டு வருவார்கள்.மதியம் 1 மணிக்கு கூட்டிக் கொண்டு வரக்கிளம்பிவிடுவார்கள்.பஸ் வந்தவுடன் தாததாவின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்து, கதை பேசிக்கொண்டு வருவான்.வீட்டை நெருங்கும்போது கையை விடுவித்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து, வீட்டுக் காலிங் பெல்லை அடிப்பான்.நாம் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தால் ’மேரா டைம்’ என்று கார்ட்டூன் சேனல் பார்ப்பான்.அவன் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டில் எங்களையும் சேர்த்துக் கொள்வான்.

சில நேரங்களில் சிறு குழந்தை போலவும் ,சிலசமயங்களில் பெரிய மனிதன் போலவும் நடந்து கொள்வான்.இரவு கம்பிளிக்குள் படுத்துக் கொண்டு ஒளிந்து பிடித்து விளையாடுவான்.’ஸ்டோன்,பேப்பர்,சிசர்ஸ்’, ’ஸ்நேக்,வாட்டர்,கன்’ போன்ற விளையாட்டுக்களை எங்களோடு விளையாடுவான்.நாங்கள் ஊருக்குக் கிளம்பும்போது அவனும் எங்களோடு வருவதாக நினைத்து, அவனுடைய விளையாட்டுப் பொருள்களை எடுத்துவைக்கச் சொன்னான். ’விடுமுறை இப்போது கிடையாது. விடுமுறை வரும்போது போகலாம்’ என்று அம்மா கூறியபோது உண்மையைப் புரிந்துகொண்டு சமாதானம் அடைந்தான்.

சிலசமயங்களில் தாத்தா அவனை உயரமாகப் பிடித்தபடி பக்கவாட்டில் ஊஞ்சலாடுவதைப் போல் ஆட்டுவார்கள்.இது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.’தாத்தா ஜூலா தாத்தா ஜூலா’ என்று கூறிக்கொண்டு பக்கத்தில் வந்து திரும்பி நிற்பான், ஜூலா ஆட்ட வசதியாக.ஆடும் போது கண்களை மூடிக்கொண்டு,கைகளை கூப்பிக்கொண்டு ஓம் நமச்சிவாய என்பான்.சில நேரங்களில் கால்களில் ஏறி நின்று கொண்டு ஊஞ்சல் ஆட்டச் சொல்வான்.

காலையில் 4 மணிக்கு விழித்துக் கொள்ளும் நான், 4.30க்கு பள்ளிவாசலிருந்து வரும் ’பாங்கின்’ ஒலியில் தான் எழுந்து கொள்வேன். தினமும் , தியானம், உடற்பயிற்சிகளை முடித்து சிட் அவுட்டின் கதவைத் திறந்தால் கண்ணன் கோவிலிலிருந்து வரும் ஆலயமணி ஒசை, அருள் மழை பொழியும் பறவைகளின் ஒலி ஆகியவை கேட்கும். சிவானந்த லகரியில் ஒரு மயில் கரிய மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியால் ஆயிரங் கண்களுடைய அழகிய தோகையை விரித்து “கே-கீ”என்று கூவிக் கொண்டு ஆடும் காட்சியை ஆதி சங்கரர் விளக்குகிறார். அது போல் நான்கு மயில்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் அகவும்.

மதில் சுவரில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட வித விதமான பறவைகள் வரும்.காக்கா,புறா கிளி, சிட்டுக்குருவி,தேன் சிட்டுஆகியவை வரும். கொண்டைவால் குருவி ஒன்று கொண்டையை ஆட்டி ஆட்டி வரும் அழகோ அழகு.பின், பருந்து, அணில் மீதம் கீழே சிதறியவற்றை உண்ண எறும்பு கூட்டங்கள் என சகல ஜீவராசிகளுக்கும் உணவு உண்டு.(அவர்களுக்கு சப்பாத்தி சாதம் என பாம்பே மீல்ஸும் உண்டு)இக்காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.வீட்டுக்குப் பின் புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் பறவை கூட்டமாய் உட்கார்ந்து எதையோ கொத்தித் தின்னும் போது நாய் துரத்தும் . துரத்தும் போது அவை சட் என்று பறக்கும் . மறுபடியும், மறுபடியும் இந்த விளையாட்டு தொடரும். மழை பெய்து தண்ணீர் தேங்கிக் கிடக்கும். அதில் பறவைகள் உடம்பை முக்கி குளிக்கும். அந்த ஊர் மக்கள் பறவைகளுக்காக ஒவ்வொருவர் வீட்டிலும் தண்ணீருக்கும் ,உணவுக்கும் பாத்திரத்தை வைத்து இருப்பார்கள்.தினம் எறும்பு புற்றுக்கு அரிசிக் குருணை போடுகிறார்கள்.

என் பேரன் சின்ன கண்ணன் எப்படி கண்ணை விட்டு மறைய வில்லையோ அது போல்  அங்கு உள்ள குருவாயூர் கண்ணனும் கண்ணுக்குள் இருக்கிறார். நாங்கள் போன சமயம் அந்தக் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு கார்த்திகை 1ஆம் தேதியிலிருந்து 48 நாளுக்கு மண்டலாபிஷேக விழா. தினமும் கச்சேரி,நடனம்,பஜனை எனச் சிறப்பாய் நடந்தது.

குருவாயூர் கண்ணனுக்கு நித்தம் பூ அலங்காரம் தினசு தினசாய்.தென்னம் பூவில் வளையல் மாதிரி செய்து அதை மாலையாகப் போட்டு இருந்தார்கள், அப்படி ஒரு அழகு.கோவில் முழுவதும் விளக்கு சரவிளக்கு,அடுக்கு விளக்கு , கொடி கம்பம் அளவுக்கு விளக்கு என விளக்குகளின் அணிவகுப்பு. அவை சுத்தமாய் பளபளப்பாய் இருந்தது மிக விஷேசம்.

தினம் விளக்கை தேய்த்து பள பளப்பாயாக்க வயதான இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் வேலை செய்கிறார்கள். நம்மை பார்த்து ’ராம் ராம் நமஸ்த்தே’என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடருவார்கள்.அர்ச்சனை கூடைகளும் அப்படி தினம் சுத்தம் செய்கிறார்கள்.

பூஜை செய்பவர்கள் சுத்தமாய் அந்த குளிரிலும் சட்டை போடாமல் பூஜை செய்கிறார்கள். ஐயப்பன் முன் வைத்து இருக்கும் 18 படிகளிலும் தினமும், கலசம்,ஸ்வஸ்திக் போன்ற ஒவ்வொரு வடிவங்களில் விளக்கு வைத்து இருந்தார்கள்.

தினம் மாலை 6.30க்கு கோவிலில் நுழையும் போது சுக்குவெள்ளம்(சுக்குகாபி)
கொடுப்பார்கள்.குளிருக்கு இதமாக இருக்கும்.பிறகு பஜனை. அதில் கைகளைத் தட்டித் தட்டிப் பாடும் போது மீதி குளிரும் போய்விடும்

.பாடுபவர்,’ முன்னால் வாருங்கள் கையை மேலே தூக்கி தட்டுங்கள்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.(அதனால் தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள் மார்கழிமாதத்தில் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு போய் இறைவனை பாடி ஆடி துதித்து வழிபடசொன்னார்கள்.

கார்த்திகையில் ஐயப்பனுக்கும்,மார்கழியில் மற்ற எல்லா இறைவனுக்கும் எல்லா மதங்களிலும் அதிகாலைப் பிரார்த்தனை உண்டு.அது குளிரைப் போக்கி நம் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நம்மை உற்சாகப் படுத்தும் என்பார்கள்.

குளிர், குளிர் என்று போர்வைக்குள் முடங்கிக் கிடந்தால் உடல் நலம் கெட்டுப் போகும்.பிரம்ம முஹூர்த்த நேரத்தில் தியானம் ஜெபம் பிரார்த்தனை செய்வது நல்லது என்றார்கள் நம் பெரியோர்கள்.)பிறகு ஐயப்பனுக்கு பிடித்த அன்னதானமும் உண்டு. பஜனைக்கு இல்லாத கூட்டம் அன்னதானத்திற்கு வந்து விடும்.வரிசையில் நின்று( பனியில்) வாங்க வேண்டும். நல்ல சூடாகத் தருவார்கள்.இரண்டு நாட்கள் பிரசாதம் பெற்றோம். வீட்டில் என் பெண் சப்பாத்தியும் வித, விதமான சப்ஜியும் அப்பாவிற்காக செய்து இருப்பாள் என்று என் கணவர் வந்து விடுவார்கள்.
இப்படியான விசேஷமான நேரங்களைப் பெற்ற நாங்கள் அதனை அவ்வப்போது நினைத்து அசைபோட்டு மகிழ்கிறோம்.
                                                                         வாழ்க வளமுடன்.

வியாழன், 29 அக்டோபர், 2009

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு

ஆதவன் தீபாவளிப் பற்றி தொடர் பதிவு எழுத இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்தார்.
தீபாவளி முடிந்து 10 நாட்கள் ஆனாலும் அழைப்பை மறுக்க முடிய வில்லை.

1.உங்களைப் பற்றிய சிறு குறிப்பு?

அன்பான குடும்பத்தின் தலைவி.

2.தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

என் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து
விட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை
மாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்
நினைவும் மறக்க முடியாது.

3.2009 தீபாவ்ளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

தீபாவளிக்கு கோவையில்.

4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளிபற்றி ஒரு சில வரிகள்?

என் கணவருடன் பிறந்தவர்கள் நாலு பேர் என் கணவரையும் சேர்த்து 5 பேர்.
எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்கள்?

எங்கள் ஊரில் தான் வாங்கினேன், இந்த முறை என் மகளும் வாங்கி வந்தாள்.

6.உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

அதிரசம் மட்டும் செய்தேன்,பாதுஷா,ஓட்டுப் பக்கோடா சமையல்காரர் செய்து
கொடுத்தார்.

7.உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்
(உ.ம்)மின்னஞ்சல், தொலைபேசி,வாழ்த்துஅட்டை)

தொலைபேசி,மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.

8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

தீபாவளி அன்று காலை புத்தாடைகளை மாமனார் கொடுக்க அதை பெற்று அணிந்து
வீட்டில் பூஜை முடித்து,பின், வயதில் மூத்த பெரியவர்களிடம் வரிசைப் படி
வணங்கி பின் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு
வந்து, வடை பஜ்ஜி, அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள்
இட்லி சட்னி என்று எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு உண்டு உரையாடுவோம். இலையில்
எத்தனை அயிட்டங்கள் என்று எண்ணி உண்போம்.எல்லாம் கொஞ்சம் தான் வைக்க வேண்டும்
ருசிபார்க்கத் தான். பிறகு உறவினர்கள், மாமனார் மாமியாரிடம் ஆசி வாங்க வருவார்கள்.
மதியம் உணவு சமைத்தல்,பிறகு மாலை எல்லோரும் குடும்பத்துடன் அன்னபூரணி
கோவிலில் லட்டு தேர் பார்ப்போம்.சிருங்கேரி சாரதா கோவில் எல்லாம்
போய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்து போக. பண்டிகை சமயத்தில் தான் எல்லோரும் சேர்வதால்
பேச நிறைய விஷயங்கள் இருக்கும்.

9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில்,
அதைப் பற்றி ஒரு சிலவரிகள்?தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின்
பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள்,அல்லது வலைத்தளம்?

நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.

10.நீங்கள் அழைக்க விருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

அடுத்த வருடம் தான் கூப்பிட வேண்டும்.

புதன், 28 அக்டோபர், 2009

திருப்பம்(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

சிவநேசனின் வீடு அன்று காலை முதலே ஒரே பரபரப்பாய் இருந்தது. அவர் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறார்கள். அவர் , குறித்த நேரத்தில் நாம் பெண் வீட்டில் இருக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் கிளம்புங்கள் என்று தன் மனைவி மகன்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்! அவருக்கு இரண்டு மகன்கள். அவர் மனைவி பட்டுப் புடவையில் வைரநகைகள் மின்ன பூரணி என்ற பெயருக்கேற்றாற்போல் பூரண கலசம்போல்
வந்தார். தன் மனைவி பூரணியைப் பார்த்த சிவநேசன் ஒரு கணம் மெய்ம்மறந்து ரசித்துவிட்டு
குறும்பாய் இப்போது நாம் நம் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறோம் என்று நினைவூட்டினார்.
பூரணியும் வெட்கத்தால் சிவந்து சரி சரி என்று சொல்லி, பூ, பழம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார்கள்.

காரில் போகும்போது தன் மகன்களைப் பெருமிதமாய்ப் பார்த்துக்கொண்டார் பூரணி.அழகு,
படிப்பு, நல்ல வேலை, நல்லகுணம் நிரம்பிய தன் மகனுக்கு நல்ல மனைவியாய் பார்க்கும் பெண் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பெண்வீட்டை அடைந்தனர். பெண்வீட்டு வாசலில் அழகாய்ச் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள் . வரவேற்பறையில் வெண்கல உருளியில் பலவித மலர்களால் அலங்கரித்திருந்தனர். பெண்வீட்டார் சிவநேசனின் குடும்பத்தாருக்கு நல்ல வரவேற்பளித்தார்கள். சிவநேசனின் மனதில் பெண்வீட்டைப் பற்றிய மதிப்பீடு உயர்ந்துகொண்டிருந்தது.

வீட்டின் உள்ளே மூக்கை உறுத்தாத ஊதுவத்தியின் நறுமணம். சிறு ஒலியில் காயத்திரி மந்திரம் பின்னணியில் ஒலிக்க, எல்லோரும் அமர, உறவின்ர்களின் அறிமுகப்படலம் நடந்தது. பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்
பேச்சு வந்தது.அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது.

பெண்வீட்டில் உள்ள வயதில் மூத்தவர், பெண்ணைப் பார்த்துவிடலாம் எனப் பேச, பெண் அழைத்துவரப்பட்டாள்.பெண்ணைப் பார்த்தவுடனேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது. பெண்ணின் உயரம்,பெண் நடந்துவந்த விதம், புன்சிரிப்புடன் அனைவரையும் வணங்கிய பாங்கு எல்லாம் பிடித்திருந்தது. பூங்குழலியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்யப் பூரணி முடிவெடுத்துவிட்டார். தன் கணவனைத் தனியாக அழைத்துத் தன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டு, பிடித்திருந்தால் பெண்வீட்டாரிடம் முடிவு தெரிவித்துவிடுவோம் என்று கூறினார். சிவநேசன் தன் மகன்களிடம் கேட்டார்,பெண் எப்படி என்று.

கல்யாணப் பையன் சங்கர், பெண் பிடித்திருக்கிறது என்றான். தம்பி சேகரும் பெண் நன்றாக இருக்கிறார் என்று தன் கருத்தைச் சொன்னான். சிவநேசன் பெண்ணின் தந்தையிடம் எங்களுக்குப் பூரண சம்மதம்.எப்போது நிச்சயம் செய்வது என்று கேட்டார். பெண்ணின் கருத்தைக் கேட்க அப்பா உள்ளே போனார்.

வெளியில் வரும்போது தயங்கித் தயங்கிப் பெண்ணிற்கு சேகரைததான் பிடித்திருக்கிறதாம் என்று சொன்னார்.

திங்கள், 12 அக்டோபர், 2009

தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்

பண்டிகை என்றாலே குதுகலம் தான். ஊர்,உறவு, சுற்றாத்தாருடன்
பண்டிகை கொண்டாடும் போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும்
ஏற்படுகிறது.நாங்களும் எங்கள் ஊருக்கு போய் கொண்டாட
போகிறோம்.வீட்டுக்கு மூத்தவர் (மாமனார்,மாமியார்)துணிகளை
எடுத்துக் கொடுக்க, அவர்கள் ஆசியுடன் நாம் பெற்று
அணிந்து வந்து,அவர்கள் ஆசீர்வாதங்கள மீண்டும் பெற்று
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்.
அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும்
பூவானமாய் மலரட்டும்.


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

வியாழன், 8 அக்டோபர், 2009

வாழ்க்கை வாழ்வதற்கே!

காதல், கடவுள், அழகு, பணம், என்ற தலைப்பில்
கவிநயா நயம்பட உறைத்துவிட்டு,வல்லிஅக்காவை
அழைத்து இருக்கிறார்கள்.வல்லிஅக்காவும் அருமை
யாக எழுதி விட்டார்கள்.என்னை அழைத்து
இருக்கிறார்கள் எழுத,நான் என் அறிவுக்கு எட்டியதை
எழுதி இருக்கிறேன், நீங்கள் படித்து தான் ஆக
வேண்டும்.

காதல்:

காதல் என்றால் அன்பு. ஒவ்வொருவருக்கும்
காதல் எதன் மீதும் வரலாம். நாம் ஆண்,பெண்
இடம் வரும் காதலைப் பார்ப்போம்.இளமையில்
ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்
மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே
இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்
முதுமை வரை கூடவரும்.

பாராதியார் காதலைப் பற்றி சொல்கிறார்

“காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்,சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர்,உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினாற் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்”

கணவனுக்கு மனைவி,மனைவிக்கு கணவன் இந்த
காதல்(அன்பு)சீராக இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை காதலிக்க
வேண்டும்.

கடவுள்:
கட+உள் = கடவுள்
இதையே திருவள்ளுவர்:

" மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும்
இறைவனை நினைந்து நமக்கு கொடுக்கப் பட்ட
வாழ்வை நல்லபடியாக வாழலாம்.
இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்
என்று திடமாக நம்ப வேண்டும்.

” அருள் துறை வளர்ச்சியின்று அமைதி உலகில் கிட்டா
அருள் துறையே இறையுணர்வும் அன்பில் உயர்
வழிபாடாம்.” மகரிஷி

பணம்:

” அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”

திருவள்ளுவர் சொன்னதுபோன்று இவ்வுலகில் வாழ
பொருள் அவசியம்.இளமையில் தேடி,முதுமையில்
இன்பமாக அனுபவிக்க வேண்டும்.பொருள் ஒன்றே
வாழ்க்கை ஆகாது.ஒன்றை பத்தாக்கும் ஆசையில்
ஏமாற்றுவாரிடம் ஏமாறக் கூடாது.வரவுக் கேற்ற செலவு
செய்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

அழகு:
பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து அழகு மாறுபடும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.
இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற
பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,
பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்
இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.

அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை
கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.
பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்
மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு
பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு
போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக
வந்து விடும்.

அப்பாடா ஒரு வழியாக வல்லி அக்கா எழுத
அழைத்த அழைப்பை ஏற்று எழுதி விட்டேன்.

நான் அழைக்க விருப்புபவர்கள்:
ராமலக்ஷ்மி,
கோமா,
R.கோபி,
சந்தனமுல்லை.

நன்றி.

“அருள் பேராற்றல் கருணையினால் உடல்
நலம்,நிறைசெல்வம்,நீள் ஆயுள்,உயர்புகழ்,
மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்”- மகரிஷி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

எங்கள் வீட்டு கொலு

சரஸ்வதி அம்மன்:

கோலம்:


மான்குன்றம்:


பூங்கா:

கோலம்:

கொலு:

சாலைக்காட்சி:



நவராத்திரி நிறைவு அடைந்து தீபாவளி வரும் சமயம்
எங்கள் வீட்டு கொலுப் பற்றி எழுதுகிறார்களே என்று
நினைக்கிறீர்களா? எனக்கு இப்போது தான் நேரம்
கிடைத்தது.

இந்த தடவை மிகவும் எளிமையாக படிகள் அமைக்காமல்
அப்படியே அலமாரியில் 5 தட்டு உள்ளது வைத்துவிட்டோம்.
கொலுப் பார்க்க வரும் குழந்தைகளுக்காக சிறு பூங்கா.
மலையிலிருந்து தண்ணீர் வருகிறமாதிரி செட்டிங்.
இந்த மலை செட் 12 பன்னிரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரே
சிமெண்ட்டில் செய்து வண்ணம் பூசியது .
இந்த ஆண்டு மலை கோவிலில் ஊட்டி மான் குன்றத்தில்
உள்ள குமரன் குடிக்கொண்டார்.

சரஸ்வதி பூஜை அன்று என் கணவர் சரஸ்வதி அம்மன்
செய்வார். கணவர் செய்யும் அம்மன் தான் சரஸ்வதி
பூஜை அன்று அனைவரின் பாராட்டையும் பெறும்.
என் அம்மா செய்த கை வேலைப்பாட்டு பொம்மைகள்,
என் மகன் வரைந்த ஒவியங்கள்,பேத்தி வரைந்த
ஒவியம் என கொலுவில் இடம் பெறும்.

குழந்தைகள் இருந்தபோது மிகவும் குதுகலமாய்
இருந்த நவராத்திரிப் பண்டிகை இப்போது கொஞ்சம்
உற்சாகம் குறைந்தாலும், பக்கத்துவீட்டில் இருக்கும்
குழந்தைகளுக்காக உற்சாகத்தை வரவழைத்துக்
கொண்டு செய்தோம், திடீர் வரவாக தம்பி தன்
மனைவி குழந்தைகளுடன் வந்து எங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.


மற்றும் ஒரு திடீர் வரவாக உள்ளூர் தொலைகாட்சி
நிலையத்திலிருந்து வந்து படம் பிடித்து ஒலி
பரப்பினார்கள்.

நவராத்திரி நாயகியர்களிடம் நல்ல உடல் பலத்தையும்
மனபலத்தையும் தரச்சொல்லிக் கேட்டுக் கொண்டு
நவராத்திரியை நிறைவு செய்தோம்.

வியாழன், 1 அக்டோபர், 2009

இன்பச் சுற்றுலாவா? துன்பச் சுற்றுலாவா?

எவ்வளவு ஆசையுடன் எவ்வளவு குதுகலத்துடன் தேக்கடிக்கு
சென்று இருப்பார்கள்,தன் குடும்பத்துடன் ,தன் உறவினர்,
நண்பர்களுடன். ஆனால் படகு கவிழ்ந்ததால் உயிர் இழப்பு
ஏற்பட்டு இன்பச்சுற்றுலா துன்பச்சுற்றுலாவாய் ஆனது மிகவும்
வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

// படகில் பயணத்தின் போது பின் பற்ற வேண்டிய விதி முறை
குறித்து அறிவிப்பு செய்வது வழக்கம். இந்த அறிவிப்பு
ஒவ்வொரு முறையும் செய்யப்படுவதில்லை என்று
படிக்கும் போது மிகவும் அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும்
உள்ளது.அறிவிப்பில் பயணத்தின் போது ஒரிடத்தில் இருந்து
வேறு இடத்திற்கு செல்லக் கூடாது, கூச்சலிடக் கூடாது,
எழுந்து நிற்ககூடாது, என்று தெரிவிக்கப்படும். இந்த
அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை, இரண்டு
ஒட்டுனர்கள் மட்டுமே படகில் இருந்துள்ளனர் சுற்றுலா
பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த கூடுதல்
பணியாளர்கள் ஒருவரை நியமித்துத்திருந்தால் பயணிகள்
ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஒட்டு மொத்தமாக
சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது இந்த கோர விபத்தை
தவிர்த்து இருக்கலாம்.//(தினமலர் செய்தி)

படகு உயரம் அதிகமாகி அகலம் குறைவாக இருந்ததும்
விபத்திற்கு காரணம் என கூற்படுகிறது. இப்படிஎத்தனை
எத்தனை ஒட்டைகள் இந்த படகு கவிழக் காரணம்.

உயிர் தப்பியவர்கள், தன்னுடன் வந்த உறவினர், உயிர்
பிழைத்து இருக்க பிராத்தனை செய்வது நெஞ்சை
உருக்குவதாய் உள்ளது.

இடி, மின்னல், மழை என்று இயற்கை வேறு சோதனை
செய்கிறது.சேறு சகதியில் சிக்கி உள்ளவர்ளை மீட்க
சிரமப்படுகிறார்கள். சகோதரியை பிரிந்த தம்பி ,
மகளை பிரிந்த தந்தை என சோகம் கேட்க, பார்க்க
கஷ்டமாய் உள்ளது.

படகில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருந்தும்,
படகு கவிழந்ததால் அதை பயன்படுத்த முடியவில்லை.

விலங்குகள் நீர் அருந்துவதைப் பார்க்க ஒரு இடத்தில்
குவிந்த்தால் இந்த விபத்து.

விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.

அரசாங்கமும், சுற்றுலா துறையும் விதிமுறைகள் ஒழுங்காய்
கடைபிடிக்கப் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

செய்யும் தொழில் சிறக்கவும்,எல்லோரும்
எல்லாம் வளமும் பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இந்த வள்ளுவனின் குறள் போல் சொல் வன்மை
மிக்கவர். இன்று ஒரு தகவல் மூலம் எல்லோர்
இதயத்திலும் இடம் பிடித்தவர்.


மூன்று நிமிட நேரத்தில் சொல்லவந்த விஷயத்தை
நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க
வைத்தவர்.

போன வருடம்” குடந்தை மனவளக்கலை மன்றம்
அறக்கட்டளை உலகப் பொது அருள் நெறி சமய
அறிவுத்திருக்கோயிலில்’ நடந்த கருத்தரங்கத்திற்கு
வந்து இருந்தார், சிறப்பு பேச்சாளராக.அவர்
சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.
கிணற்றில் விழுந்தவரை தூக்கி விடும் போது
கூட வாழ்க வளமுடன் என்று சொல்லி தான்
தூக்கிவிடுவீர்கள் என்றார்.

அவருக்கு கைவலி இருந்ததால் ஒரு நண்பர்
சொல்லி உடற்பயிற்சிகளை ஆழியாரில்
நடக்கும் மனவளக்கலை யோகாப் பயிற்சி,
ஆளுமைப்பேறு திறனூக்கப் பயிற்சி
எடுத்துக் கொண்டார்.சன் டிவியில்
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை
ஆசை சீர் அமைத்தல், சினம் தவிர்த்தல்
கவலை ஒழித்தல் ஆகியவற்றை அவர் பாணியில்
எல்லோருக்கும் சொன்னார்.

இன்று காரைக்கால் எப் எம்மில் ‘இன்று ஒரு தகவலில்’
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த யோசனை
சொன்னார் அவர் பாணியில்.
ஒரு நண்பர், இன்னொரு நண்பரிடம் புகைபிடிப்பதை
விட யோசனை கேட்டாராம், அதற்கு அவர் நானே
10முறை நிறுத்தி முயற்ச்சித்துஇருக்கிறேன்
என்றாராம்.

இவர் 10 யோசனை சொல்லுகிறார் புகை பிடிப்பதை
நிறுத்த:
1.புகைபிடிக்கும் நண்பரை விட்டு சிறிது காலம்
விலகி இருத்தல்.
2.புகை பிடிப்பதை விட தீவீர பிரச்சாரம் செய்ய உறுதி.
3.இரண்டு தடவை குளிப்பது, வெது வெது தண்ணீரில்
ஒரு முறை, குளிர்ந்த நீரில் ஒரு முறை.
4.உடற்பயிற்சியும்,பிராணாயாமும் செய்யவேண்டும்.
5.சாப்பாடு மிதமாக,பச்சை காய்கறிகள் சாப்பிடவேண்டும்
இவை இரத்த அளவை சரிப்படுத்தும்.
6.இரவு ரொம்ப நேரம் படுக்கைக்கு செல்லாமல் விழித்திருக்க
கூடாது.
7.போதைபொருள்கள் விலக்கவேண்டும்.
8.கடுகு,மிளகு காரம் குறைக்கவேண்டும்,தினம்
9 டம்ளார் நீர் அருந்த வேண்டும்,வெறும் தண்ணீர்
புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கும்.
9.இறை நம்பிக்கை மூலம் பிராத்தனை செய்யவேண்டும்.
10.வேண்டியவர்களிடம் புகைபிடிப்பதை விட்டு விட்டாதாக
சொல்லவேண்டும்.


இதை சொல்லிவிட்டு கடைசியில் அவர் பாணியில்
ஒன்று சொல்வாரே அது:முக்கியமான இடத்தில் அவர்
நின்று கொண்டு இருந்ததாராம்,ஒருவர் அவரிடம்
இங்கு புகை பிடிக்கலாமா? என்று கேட்டாராம்,
அதற்கு இவர் பிடிக்க கூடாது என்றாராம்
அப்படியானால் உங்கள் பக்கத்தில் கிடக்கும் இது
என்ன? என்றாராம்? இவை எல்லாம் என்னிடம்
அனுமதி கேட்காதவர்கள் பிடித்தது என்றாராம்.


புகை பிடிக்கும் நண்பரை விட்டு விலகி இருக்க
சொன்னதை கேட்டவுடன் மகரிஷி சொன்னது
நினைவு வந்தது//,யாராவது முதல் சிகரெட்டை
காசு கொடுத்து வாங்கி இருப்பானா? நண்பன்
குடித்துப் பார் நன்றாக இருக்கும் என்று
கொடுத்து இருப்பான்//இப்படித்தான் ஆரம்பிக்கும்
அவன் முதல் புகை பிடிக்கும் பழக்கம்.


புகை பிடிக்கவேண்டாம் என்று அதன் தீமைகளை
எடுத்து சொல்லும் போது அதில் பெருமிதம் ஏற்பட்டு
விட்டு விடுவான் என்று நம்புகிறார்.

புகை பிடிப்பதை விட சிலர் வாயில் எதையாவது
போட்டுமென்றுக்கொண்டு இருப்பார்கள் இவர்
வெறும் தண்ணீரை குடித்தே விட்டுவிடலாம்
என்கிறார்.


கடைசியில் வேண்டியவர்களிடம் புகை பிடிப்பதை
விட்டு விட்டேன் என சொல்ல சொல்கிறார்
புகை பிடிப்பவர்கள் மத்தியில் இருந்தால்,
ஆசை இருந்தாலும் வேண்டியவர்களிடம் சொல்லி
விட்டோம் குடிப்பது இல்லையென்று என்ற
எண்ணம் சங்கல்பம் மாதிரி செயல்படும் என
நினைக்கிறார்.


வானொலியில் அவர் குரல் ஒலித்துக் கொண்டே
இருக்கும்,தொலைகாட்சியிலும் அவர் குரல்
ஒலித்துக் கொண்டு இருக்கும்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.

புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன்
இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிக்கே கிடைக்கும்.


இன்று அவர் பூர்விகமான தஞ்சாவூர் மாவட்டம்
கஞ்சனூர் கிராமத்தில் இறுதி சடங்கு,ஏராளமானனோர்
இறுதி அஞ்சலி, நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

அவர் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்வோம்.

வாழ்க சுவாமிநாதன்!!

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியாரை நினைவுகூர்வோம்

பாரதியார்

நம் தேசிய கவி பாரதியார்க்கு இன்று நினைவு நாள்.
அவரை நினைவு கூர்வோம்.

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து இருந்த தமிழகத்தில்

வாராது போல் வந்த மாமணி பாரதி.

மகாகவி, மக்கள்கவி, மானுடம் பாட வந்த வரகவி

பாரதி.

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி
தேசிக விநாயகம்பிள்ளை பாடியது போல் அவர்
சொல்லாத, எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை.


பக்திப் பாடல்கள்,தேசபகதிப் பாடல்கள்,தன்வரலாறும்
பிறபாடல்களும்,கற்பனையும் கதையும்,
பொதுமைப் பாடல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

கடவுள் பாடலிலும் பிறர்துயர் தீர்த்தல்,பிறர்நலம்
வேண்டுதல் என்று யார் எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
அந்த கடவுள் அவ்ர்களுக்கு அருள் புரிதல் வேண்டும்
என்கிறார். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
என்னை நீ காப்பாய் என்கிறார்.

அச்சமில்லை யச்சமில்லை என்றுபாடி நம் அச்சத்தை
போக்குகிறார்.ஜயமுண்டு பயமில்லை இந்த ஜன்மத்திலே
விடுதலையுண்டு, என்றுபாடி வெற்றிப்பாடல் பாடுகிறார்,
ஜய பேரிகை கொட்டடா-கொட்டடா என்று.

காக்கை,குருவி யெங்கள் ஜாதி-கடலும் மலையுமெங்கள்
கூட்டம் என்று சமத்துவம் பேசுகிறார்.
ஓயாதே நின்றுழைத்திடுவாய் என்று மனத்திற்குக் கட்டளை
யிடுகிறார்,கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு
வெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்; என்று
வாழ்த்துகிறார்.

தேசிய கீதத்தில்// ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே//என்று ஒற்றுமையை
வலியுறுத்துகிறார்.

நாட்டு வணக்கத்தில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களுக்கு
வீர வணக்கம் தெரிவிக்கிறார்.

பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள் பாரதநாடு என்றும்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்-அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் உடலில்
புது ரத்தம் பாயசெய்கிறார்.

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார் என்று

கொடி வணக்கத்தில் வீரர் புகழ் பாடுகிறார்.
கொடி வணக்கம் பாடும் போது நம் உடல்
சிலிர்த்துப் பூரிப்பு அடைவதை உணரலாம்.

அஞ்சி வாழ்பவர்களைக் கண்டு
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று
ஜனங்களின் தற்காலநிலைமை என்று பாடினார்.அது
இக்காலமனிதருக்கும் பொருந்துகிறது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று
பாரதத்தை வாழ்த்துகிறார்.

பாரத சமுதாயம் எல்லோருக்கும் உரியது என விளக்க
எல்லாரு மோர்குலம் எல்லாருமோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாருமோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க

என்று பாடுகிறார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்று
தமிழ் நாட்டைப் போற்றிப் புகழ்கிறார்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.என்று பாடுகிறார்.

சுதந்திரப் பயிருக்காக:
தண்ணீர்விட்டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ? என்ற
இந்தப் பாட்டைக் கப்பலோட்டிய தமிழன் படத்தில்
திருச்சி லோகநாதன் அவர்கள் உருக்கமாய்ப் பாடி
இருப்பார்கள். அதைக் கேட்டால், கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்?
இந்தப் பாடலையும் திருச்சி லோகநாதன் பாடியிருப்பார்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில். பாரதியார் பாடல்கள்
அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாக்களில்
பாடப் படுகிறது. கர்நாடக இசை கச்சேரிகளிலும்
பாடப் படுகிறது,இன்னும் அதிகமாக பாட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்குப்
பாரதியார் பாடல்கள் கற்றுத் தரவேண்டும்.
நான் பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர்
சொல்லிக் கொடுத்தபடி
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற
பாடலைப்பாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்வோம்.
சுதந்திர தினத்தன்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்ற பாட்டைப் பாடுவோம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்று அவர் கூறியபடி இக்காலப் பெண்கள் எல்லாத்
துறைகளிலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.











.

திங்கள், 7 செப்டம்பர், 2009

குருந்த மலை முருகன்

















குழந்தை வேலாயுதசாமி

மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில்,கோவை மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5கிலோ மீட்டர் தூரத்தில் அத்திகடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்த குருந்தமலை உள்ளது.


நான் சிறுமியாக இருக்கும் போது போனது. ஒவ்வொரு முறை கோவை போகும் போதும் என் கணவரிடம் குருந்தமலை முருகன் கோவில் போகவேண்டும் என்று சொல்வேன். வேறு எந்த எந்தக் கோவிலோ போவோம், இந்த முருகன் கோவில் மட்டும் போக முடியவில்லை. என் மகள் விடுமுறைக்கு வந்தபோது கோவையில் ஆச்சி வீட்டுக்குப் போய்விட்டு பெரியப்பாவீடு, சித்தப்பாவீடு, மற்றும் எங்கு போவது என்று முடிவு செய்த போது, நான் மறுபடியும் குருந்தமலையைத் தேர்வு செய்தேன். என் மகளிடமும் பேத்தியிடமும் குமரன் இடம் பற்றி நிறைய வர்ணித்து என் கட்சிக்கு வலு சேர்த்து டாக்சி வைத்துக் கொண்டு போனோம்.

‘ சின்ன வயதில் நான் (கோவையில் படிக்கும் போது) சின்மயா மிஷன் நடத்திய பாலவிஹாரில் ஞாயிறு தோறும் வாரவழிபாடு நடக்கும். அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருநாள், பஸ்ஸில், இந்த மலைக்கு வந்தோம். முருகன் மலைக்கு எதிரில் அனுமன் இருப்பார். மலையில் அனுமனைச் சுற்றி வரலாம் அங்கு தான் நாங்கள் எல்லாம் பஜனை செய்தோம் . கொண்டு போன உணவை அங்கு வைத்து சாப்பிட்டோம்.’ இப்படி எல்லாம் குழந்தைகளிடம் சொன்னேன். முருகன் மலையில் கொஞ்ச படி தான்(125 )உண்டு. மேலே இருந்து பார்த்தால் வயல்களும் மரங்களும் காற்றும் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களைஅழைத்து சென்றேன்.

டாக்ஸியை விட்டு இறங்கியதும் ஒரு சிறுமியின் குதுகலத்துடன் அனுமன் மலையை நோக்கிப் போனேன் ,அங்கு அனுமனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பிவிட்டார்கள். முருகன் கோவிலும் திருப்பணி நடந்து கொண்டு இருந்தது. மலை மேலும் புதிதாகக் கட்டடங்கள் இப்போது வந்து விட்டன.மலையின் இயற்கை அழகை அவை ஓரளவு கெடுத்துவிட்டன.

தலவரலாறு
-----------


சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகக் குருந்தமலை குழந்தை
வேலாயுதசாமி கோவில் கருதப்படுகிறது. சிறிய குன்று தான். கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஐநூற்றாம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் மிளகு, கிராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை சேர நாட்டிலிருந்து வாங்கி அட்டப்பாடி, குருந்தமலை சத்தியமங்கலம் போன்ற ஊர்களின் வழியே மைசூர் சென்று வணிகம் செய்தனர்.ஒரு முறை பொதி மாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வ்ந்தபோது, இந்த குருந்தமலையடிவாரத்தில் தங்கியிருந்தனர். ஒரு சிறுவன் இந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்க அவர்கள் விளையாட்டாக தவிட்டு மூட்டைகள் என்றார்கள்.மறு நாள் மூட்டைகள் தவிடாக மாறி இருப்பதை அறிந்து இரவு வந்தது குமரன் என உணர்ந்து அந்த குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டமுடிவு செய்தனர். மீண்டும் அவர்கள் தவிட்டு மூட்டையை மிளகு மூட்டையாக மாற்றினான் சித்தாடும் செல்வகுமரன்.

ஐந்து நிலை கோபுரத்தை வணங்கி உள்ளே போனால் ராஜகம்பீர விநாயகர்.
18வது படியில் கருப்பண்ணசாமி அதற்கு மேலே வடக்கு நோக்கி இடும்பன். காசிவிஸ்வநாதர் கோவிலும் கருங்கல்லினாலான தீபஸ்தம்பமும் உள்ளன. இங்கு நாகதீர்த்தம், மயில்தீர்த்தம் என்ற சுனைகள் பாசி பிடித்துப்போய் குப்பைகூளங்களால் நிறைந்து உள்ளது.படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப் ப்ட்டுள்ளது. இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன.

காசிவிஸ்வநாதரை அடுத்து சூரியன் பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கங்கள்,
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக கல்யாண சுப்ரமணியர் சன்னதிகள், கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சன்னதி உள்ளது. கிழக்குப் பக்கம் பாறையில் இயற்கையாக ஏற்பட்ட சண்முகச்சுனை, ஆறுமுகச்சுனை உள்ளன. இதுவும் பாசி பிடித்து உள்ளது. திருப்பணி நடப்பதால் சுனைகளை சுத்தம் செய்வார்கள் என நம்புகிறேன். கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் குழந்தை வேலாயுதனாக காட்சி தருகிறார்.

அகத்திய முனிவரும் , ஆதிசேஷனும், சூரியனும் குமரனை வழிப்பட்டதாகத்
தலவரலாறு கூறுகிறது.மார்ச் மாதம் 21,22,23 தேதிகளில் மாலை 5.30 முதல் 6.30வரை கதிரவன் தன் ஒளியால் வழிபடுகிறான்.

கொடிமரத்தின் பக்கத்தில் சுற்றுசுவர் அருகிலிருந்துப் பார்த்தால் இயற்கையை
ரசிக்கலாம்.என் மகள் அடுத்த தடவை வரும் போது இந்த வயல்வெளியெல்லாம் கட்டடமாக மாறிவிடும் இல்லையாம்மா என்றாள். என் பேரனும் ,பேத்தியும் பாறைகளில் தவம் செய்வது போல் அமர்ந்து புகைப்ப்டம் எடுத்துக் கொண்டார்கள். நான் பாறையில் குதுகலமாய் ஏறி இறங்குவதைப் பார்த்து அம்மாவிற்கு தன் பள்ளிப் பருவம் நினைவு வந்து விட்டது என்று என் கணவர் மகளிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டார்.


மலைக்குக் கிழக்கில் இன்னொருமலையில் வள்ளி குகை உள்ளது . முன்பு வந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அமாவாசையன்று மட்டும் தான் மக்கள் போவார்கள் என்று சொன்னதால் நாங்கள் அங்கு செல்லவில்லை. அங்குள்ள சுனையில் எப்போதும் நீர் இருக்குமாம். ஆண்டிற்கொருமுறை பழனிக்கு இங்கிருந்து அதை பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்வதற்கு எடுத்துச் செல்வார்களாம்.

குழந்தைவேலாயுதசாமியின் அலங்காரத்தைப் பார்க்கும்போது பழனிமுருகனைப் பார்ப்பது போலவே உள்ளது.

தூயகாற்று, அமைதி, ஆனந்தம் ஆகிய்வற்றை அங்கு பெறலாம்.
மிகுந்த மனநிறைவோடு வீடு திரும்பினோம்.






சனி, 5 செப்டம்பர், 2009

குரு உரு சிந்தித்தல்

குரு

தெளிவு குருவின் திருமேனி காண்ட்ல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.
-திருமந்திரம்.

எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதி மயமான
இறைவனைத் தியானிப்போமாக. (காயத்ரிமந்திரக்கருத்து)


அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப் பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவுகூர்வோம்.

தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகளெல்லாம் என் சொத்தாச்சு
இந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம். -வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

மழையும் மகிழ்ச்சியும்


மழையும் மகிழ்ச்சியும்


மழையைப் பற்றி வல்லி அவர்கள் எழுதுங்களேன் என்றார்கள் என்னை. எனக்கு மிகவும் பிடிக்கும் மழைக்காலம். எனக்கு, என்கணவருக்கு, என்குழந்தைகளுக்கு, மழையை ரசிக்கப் பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும்போது மழையில் நனைந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.

மழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..

பாளையங்கோட்டையிலுள்ள சாரட்டக்கர் பள்ளியில் நடந்த கிறித்து பிறந்தவிழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த
பரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.

வீட்டுக்கு அருகில் வந்தபின் தான் நினைவு வந்தது.புதுக் குடை அம்மா கஷ்டப்பட்டு பேர் பின்னிக் கொடுத்தது. அம்மாவிடம் குடை தொலைந்து விட்டது என்றால் திட்டுவார்களே என்று மூவரும் கலந்து பேசிப் பக்கத்து வீட்டுப் பவளத்தையை(தூரத்துச் சொந்தம்) சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.


எனக்குத்திருமணம் ஆகி திருவெண்காடு என்ற ஊருக்கு வந்தேன். அங்கு முதலில்பெரிய ஓட்டு வீடு நிறையபேர் இருக்கலாம்,ஆனால் அந்த பெரியவீட்டில் நானும் என்கணவரும் மட்டும் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ,என் கணவர் இன்னொரு விஷயம்
சொன்னார். மழைக் காலத்தில் அந்த வீட்டுத் தரையிலிருந்து நீர் ஊறி மேலேவரும் என்று சொல்ல,

என் மாமியார் ,’அதை ஏன் கேட்கிறாய் போ நான் கார்த்திகை மாதம் இந்த வீட்டில்மாட்டிக் கொண்டேன் அப்போது மழை புயல்
இருந்தது,15 நாள் மின்சாரம் வேறுஇல்லை தரைஎல்லாம் தண்ணீர் .கொல்லைப்புறத்தில் பாத்ரூமை
ஒட்டி வாய்க்கால் ஓடும் .அதில் தவளை சத்தம் காதை அடைக்கும் ’என்று மேலும் திகில் ஊட்டினார்கள்.

என் கணவர் பணியாற்றும் கல்லூரி முதல்வர் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டார்கள் அவர்கள் வீட்டில் மாடி போர்சன் காலியாக இருந்தது உடனே அந்த வீட்டிற்கு வந்து விட்டோம்  அங்கு மழைக் காலம் மிகவும் இனிமையானது.

அந்த வீட்டின் வராந்தாவிலிருந்து திருவெண்காடு கோவில் ,அங்கு உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் எல்லாம் தெரியும். பிரதோஷவிழாவிற்கு சாமி சுற்றி வருவது(இரண்டு வெள்ளிரிஷபத்தில் சாமி சுற்றிவரும்)தெரியும். மழை என்ற முக்கிய விசயத்திற்கு
வருவோம் இந்த வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி.

குழந்தைகளும் கம்பிகேட் வழியாக மழையை வேடிக்கைப் பார்ப்பதும் என் பெண் பள்ளியில் சொல்லித் தந்த மழைப் பாட்டைப் பாடுவாள். நாங்கள் கேட்டு மகிழ்வோம் அதை டேப் செய்து வைத்து இருக்கிறோம். புயல் மழைக்குப்பொருத்தமாய் இருக்கும் அந்தப்பாட்டு:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூறலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.'

குழந்தைகள் இருவருக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட’ ஊசி மூஞ்சி மூடா ’கதை சொல்வேன் அதுவும் மகள் பாடத்தில் வந்த கதை தான் .

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதா?கூடு கட்டி வாழ் என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.

பள்ளி கல்லூரிகளுக்குப் போனபின் தான் விடுமுறை என்று அறிவிப்பார்கள் .அப்போது பிள்ளைகள் படும் பாடு அதுவும் என் மகன் படித்த பள்ளியில் சுற்றிலும் தண்ணீர் இருக்கும் நடுவில் இருக்கும் பள்ளிக்குச் செல்வது கஷ்டம்.

இப்படி மழையில் கஷ்டப் பட்டாலும் மழை எனக்குப் பிடிக்கும். பாரதியாரின் மழை பாட்டுப்பிடிக்கும்:

திக்குக்க ளெட்டுஞ் சிதறி- தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட் தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகளுடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்
சாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று- தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் -கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையு மிடிய- ம்ழை
எங்கனம் வந்ததடா தம்பி!-தலை


அண்டங் குலுங்குது தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் திசை
வெற்புக் குதிக்குது வானத்துத்தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்- இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

மழையினால் வரும் மகிழ்ச்சிக்கு மற்றுமொரு பாட்டு.
நாமும் இப்பாடலைப்பாடி மகிழ்ச்சி அடைவோம்

ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி- மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே -கேணி
நீர்ப்படுசொ றித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே-மழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச-சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.


.மழையே நம்மை என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் என்று வள்ளுவரும் சொல்கிறார்.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று,

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

எங்கள் வீட்டு விநாயகர்



சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தாய்மை





”பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறென்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு”

தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்
ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற தெய்வம் குடிகொண்டுள்ளது. ஒவ்வொருவரும்
அந்த குடியிருந்த கோயிலை மறக்க முடியாது - மறக்கக் கூடாது,

மாதா,பிதா,குரு, தெய்வம் என்று சொல்வார்கள். முதல் இடம் தாய்க்குத்தான்.
மாதா சொல்லித்தான் மற்றவர்களை நமக்குத் தெரியும்.
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,’தாயிற் சிறந்த கோயிலும்
இல்லை.’என்றெல்லாம் தாயின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம்.

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' என்றார் திருவள்ளுவர்.


போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.
எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும்
துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும்
இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை
சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன்
படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து
வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்கள்.
எல்லாப் பேரக்குழந்தைகளுக்கும் கோலம், சமையற்குறிப்பு , எம்பிராய்டரி
என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.

எனது மாமியார்

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

என்றார் திருவள்ளுவர். மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்றும் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்றும்
கூறினார். நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
மாமியாருக்கு முத்தம்மாள் என்ற பெயர் பொருத்தமுடையதாகவே உள்ளது.

முத்தம்மாள் பெற்ற நல்முத்துக்கள் ஐந்து. நல்லொழுக்கம், நல்ல இறை
நம்பிக்கை கொண்ட நல்ல மனிதராய்களாய் வளர்த்து ஆளாக்கியவர் அவர்.
ஐந்து மருமகள்களையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.எனது
மாமனாருக்கு நல்ல வாழ்க்கைத்துணையாக இருந்து வருகிறார்கள்.
இப்போது நூறு வயதான என் மாமனாருக்கு நல்லதொரு தாயாகி ஒரு
குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் வயது 85 ஆகிறது. தனது முதுமையால் ஏற்படும் உடல்
துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் கணவரை கண்ணும் கருத்துமாய்ப்
பாதுகாக்கிறார்.

விடுமுறைக்குப் பேரன் பேத்திகள் வந்தால் அவர்களுக்குப் பிடித்த பலகாரங்
களைச் செய்து அவர்களை மகிழ்விப்பார். இப்போது முதுமை காரணமாகப்
பழையமாதிரி செய்யமுடியாமற் போனாலும் ’நமக்கு முடியும்போது வருவார்
களா?’ என்று கேட்டுவிட்டு எளிதாகச் செய்யும் பலகாரங்களைச் செய்து
கொடுத்து மகிழ்வார்கள்.

பேரன் பேத்திகளோடு இக்கால அக்கால எல்லா உலக விஷயங்களையும்
பேசி அவர்களை மகிழ்விப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே
இல்லை என்று கூறலாம்.

எனது மகள்

எனது மகள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் . தன் குழந்தைகள் பல கலை
களிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று பாடுபடும் தாய். தன் குழந்தைகளுக்கு
எவ்வளவு விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு
விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். நடனம்,பாட்டு.
விளையாட்டு,பொது அறிவு ஆகியவற்றில் அவர்கள் சிறக்கச் செய்திருக்கிறாள்.
அதைப் பார்க்கும்போது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது போல் எனது மகள் என்னைக்
காட்டிலும் சிறந்த தாயாக விளங்குகிறாள்.

எனது மருமகள்

எனது மருமகளும் இப்போது ஒரு ஆண்மகவிற்குத் தாயாகி இருக்கிறாள்.
அவள் இருப்பது அமெரிக்காவில். அங்கு பிரசவ நேரத்தில் கணவனும் உடன்
இருக்கலாம். என் மகன் உடன் இருந்தான். சுகப்பிரசவம் என்று சொல்லி
கடைசி நேரத்தில் ஆயுதம் போட்டு என் பேரனை வெளியில் எடுத்தார்கள்.
திருச்சி தாயுமானவரே பிரசவம் பார்த்தது போல் ’ டாக்டர் தாய் ’எனது
பேரனை எனது மருமகளிடம் கொடுத்தார்கள்.

எனது மருமகள் டாக்டருக்கு தாய்மையின் சிறப்பை அற்புதமாய்க் காட்டும்
சிலையை(தாய் குழந்தையை மார்போடு அணைத்துக் கொஞ்சும் சிலை)
கொடுத்து ,’எனக்கு என் மகனைக் கொடுத்த தேவதை நீங்கள்’ என்று கண்ணீர்
மல்கப் பாராட்டியபோது, சிலையையும் என் மருமகளையும் அணைத்துக்
கொண்டு அவர்களும் கண்ணீர் மல்கியபோது தாய்மையின் சிறப்பு
தெரிந்தது.

என் மருமகளுக்கும் பிரசவத்தின் போது உதவிக்கு வந்திருந்த தன் தாயின்
மீது அன்பும் பாசமும் அதிகரித்திருக்கும்.

எனது மகன் பிரசவத்தின் சமயம் உடனிருந்ததால் அவனுக்கும் தாய்மையின்
சிறப்பு தெரிந்திருக்கும்.அவனுக்கும் அவள் மேல் பாசம் அதிகரித்திருக்கும்.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் குழந்தையைப் பார்க்கவரும் போது
அம்மாவைப் பார்த்து ’பெற்றுப் பிழைத்தாயா?’ என்று கேட்பார்கள்.
ஆம். பெற்றவளுக்கு அது மறுபிறவிதான்!

தாய்மை இப்படி பல உறவுகளில் பரிணமிக்கிறது!

பெண்வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே வளர்ந்தாய்
பெண்துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமையுணர்

தாய்மையைப் போற்றுவோம்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஆடிப்பெருக்கு





ஆடிப்பெருக்கு


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல் ஆறிருக்குமிடம்
எல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது . என்றாலும்
காவிரிக்கரைகளில் சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னிப்பெண்கள் நல்ல கணவரை அடையவும், புதுமணத் தம்பதியர்
தங்கள் வாழ்வு சிறக்கவும், மணமான பெண்கள் தங்கள் மணாளர்
நீண்ட ஆயுள் பெறவும் ஆற்றுமண் எடுத்துக் காவிரியம்மன்
உருவம் செய்து வழிபடுவார்கள்

ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் இதற்கு முந்தைய ஆண்டுகளில்
எனது மகள் , மகனோடும் அக்கம்பக்கத்தாருடனும் ஆற்றுக்குப்போய்
இவ்விழாவைக் கொண்டாடியதை நினைவுபடுத்திக்கொள்வேன்.

என்மகள் சிறுபெண்ணாக இருக்கும்போது கைகளிலும் கால்களிலும்
மருதாணி வைத்துக்கொள்வாள். தன் தம்பியோடு கடைக்குச்
சென்று வளையல் பாசிமணி ரிப்பன் தோடு என்று அவளுக்குப்
பிடித்தமானவைகளை வாங்கிவருவாள்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எம்.ஜி,ஆர் கடை என்ற கடையொன்று
உண்டு.அங்கு போய் தான் வாங்குவாள்,கொஞ்சம் பெரியவள் ஆனதும்
சரசுகடையில் நதியா வளையல்,நதியா தோடு, நதியா பாசி,என்று
வாங்கி வருவாள்.அவளுக்குப் பிடித்தது கருமணி தான்.இப்போது
திருமணமான பின்னும் அவளுக்குப் பிடித்தது கருமணிதான்.

சிறு பையன்கள் அவர்களே செய்த ஆடித்தேர்களை இழுத்து
வருவார்கள். என் குழந்தைகளும் கூடச் சென்று மகிழ்வார்கள்,

இப்போது காவிரியாற்றில் நல்ல தண்ணீரும் இல்லை. எனது
பிள்ளைகளும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்,
ஆற்றுக்குச் செல்ல பழைய நண்பர்களும் இல்லை.எல்லாக்
குழந்தைகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள்.

அதனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே காவிரியம்மனுக்கு
வழிபாடு செய்து நீர் நிலைகளில்அதைச் சேர்ப்பது மட்டும்
நடக்கிறது.

ஏரிகுளம் கிணறு ஆறுஎல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்








சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆடி வருகுது வேல்













ஆடி வருகுது வேல்!

ஆடி வருகுது வேல் சுற்றி நில்லாதே பகையே!



முத்தான முத்துக்குமரா முருகையா வாவா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தைமகிழ வாவா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதையா

பெங்களூர்  ரமணி அம்மா அவர்கள் பாடிய இந்த பாட்டைக்  கேட்கும் போதலெல்லாம்  மனக்கண்ணில்     ,வேலும், மயிலும் ஆடிவருவதும், மக்கள் கூட்டம் வரும் காட்சியும் விரியும்.. 

.

சமீபத்தில் நானும் என் கணவரும் விராலிமலை போயிருந்தோம்.

நாங்கள் அங்கு படியேறும்போது எங்களுக்கு முன் தோகைமயில் ஒன்று அழகாய்ப் படியேறிக் கொண்டிருந்தது.(அதற்கு முருகனிடம் என்ன பிரார்த்தனையோ? )

அப்போது  மழை  மேகம்  இருந்ததால்  இன்னொரு  மயில்  தன் தோகையை  விரித்து அகவியவாறு  ஆடியது. அது முருகனைப்   நினைத்து பாடியாடிதைப்  போல இருந்தது. இருந்தாலும்  அதன் பின்புறத்தைக்  காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், திரும்பியாடு முருகா என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.

நூறு மயில்களுக்கு மேல் அங்கிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. இங்குள்ள ஒரு பாறையில் அருணகிரிநாதருக்கு மயில் மீது வந்து முருகன் காட்சி  தந்தாராம். மலைமேல் உள்ள கோயிலில் ஆறுமுகர் வள்ளி , தெய்வானையுடன் காட்சி தருகிறார்.  அவரது மூன்று முகங்கள்  நேராகவும்  மூன்று  முகங்கள்  பின்புறமுள்ள கண்ணாடியிலும்  தெரிகின்றன.  புறக்கண்களால்
பார்க்கக் கூடிய மூன்று முகங்கள் நேராகவும், அகக்கண்களால் பார்க்கக் கூடிய மூன்றுமுகங்கள் கண்ணாடியிலும் தெரிகின்றன.

சூரனுக்குத் தூது சென்று விசுவரூப தரிசனம் கொடுத்த வீரபாகுவின் பெரிய உருவச்சிலைஉள்ளது.  அருணகிரிநாதர், விநாயகர்,சிவன், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு
உருவச்சிலைகள் உள்ளன.

மலையழகைக் காண்பதற்காகக் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் இருந்து  இயற்கை அழகைப்பார்க்கலாம்  என்றால்  குரங்குகள் நிறைய நின்றன .  இங்குக் குரங்குக் கூட்டத்தின் குறும்புகளைத் தான் காண முடிந்தது.

மரங்களிலும் பாறைகளிலும் மயில்கள் அமர்ந்த காட்சிகளைக் கண்டவாறே  மலையிலிருந்து  இறங்கினோம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------                                                              -வாழ்க வளமுடன்

கற்றல் நன்றே

” கற்றல் நன்றே கற்றல் நன்றே
வலைக் கல்வி கற்றல் நன்றே”

நானும் வலைக் கல்வி கற்றுக்கொள்கிறேன். முதல்குரு என் பேத்தி. விளம்பரத்தில்
’மெளசைப்பிடி பாட்டி’ என்று பேத்தி சொல்வதும், பாட்டி ’எலியையா?’ என்று பயந்து, பின்
சிரிப்பது போல் வரும். அது மாதிரி நானும் என் பேத்தியிடம கணிப்பொறி விளையாட்டு,
ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

அடுத்த குரு என் மகள். வாழ்க்கைக் கல்வி கற்றுக் கொடுத்தேன் அவளுக்கு. அவள்
எனக்கு வலைக் கல்வி கற்றுக் கொடுத்தாள்.

மகள்,மகன், மருமகள் எல்லோரும் நல்ல வலைத்தளங்களை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.ஒரு மாதமேயான என் பேரனும் வருங்காலத்தில் எனக்குக் கற்றுக் கொடுப்பான்.

வலைத்தள நண்பர்களும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
எல்லோருக்கும் என் நன்றி.

திங்கள், 13 ஜூலை, 2009

குழந்தைகள் பாட்டு வேதாத்திரி மகரிஷி

சின்ன வயதுக் குழந்தைகளே!
சீக்கிரம் காலையில் எழுந்திருங்கள்!
அன்னை தந்தை இருவருக்கும்
அன்பாய் வணக்கம் செலுத்துங்கள்!
பல்லைத் துலக்கி முகங்கழுவி
பரமனை மனதில் நினையுங்கள்!
எல்லை இல்லா ஆன்ந்தம்
எழுந்திடும் உங்கள் இளம்நெஞ்சில்.


உள்ளத்தன்பால் உருக்கமுடன்
உங்கள் ஆசான் போதித்த
பள்ளிக்கூடப் பாடத்தைப்
படிக்கவேண்டும் இருதடவை.
வீட்டுக்கணக்கைப் போட்டுப்பின்
விடைகள் சரியா எனப்பாரீர்!
நாட்டுக்குழைத்த நல்லோரின்
நினைவை என்றும் மறவோமே!

அம்மா கொடுக்கும் ஆகாரம்,
அளவாய் உண்ணவேண்டும் அதை.
சும்மா அதிகம் சாப்பிட்டால்
சுகத்தைக் கெடுக்கும் அறிந்திடுவோம்.
நேரம் தள்ளிப்போகாமல்
நினைவாய்ப் பள்ளிக்கூடம் போய்
ஆரம்பிக்கும் முன்னாலே
அமர்ந்திட வேண்டும் இடத்தினிலே.

ஊக்கத்தோடு படித்தோர்கள்
உயர்ந்தோர் ஆனார் பலர் அந்த
நோக்கத்தொடு கல்வி தனை
நன்றாய்க் கற்றுத்தேர்ந்திடுவோம்!
தினமும் மாலை வேளையிலே
திறமையாகப் பலர்கூடி
மனமுன் உடலும் நலமடைய
மகிழ்ச்சியோடு ஆடிடுவோம்.

அந்தி வேளை மேற்குப்புறம்
ஆகாயத்தைப் பார்த்திடுவோம்!
விந்தையாக மேகங்கள்
விதவிதமாகத் தோன்றிடுமே!
இரவு வேளை வானத்தில்
எங்கும் நட்சத்திர மயமே
பரவி மினுக்கு மினுக்கென்று
பார்க்க அழகாய்க் காட்சிதரும்.

நிலவு இருக்கும் இரவுகளை
நினைக்க நினைக்க ஆனந்தம்!
உலவி மேகம் சில நாளில்
உள்ளக் கருத்தை விளைவிக்கும்!
அம்மா அப்பா வளர்க்கின்றார்!
ஆசான் படிப்பைத்தருகின்றார்!
சும்மா வானம் பூமி இவை
சுகத்தைத் தருகிறது எல்லோர்க்கும்.

இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற.
மறைவாய் நின்று அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்!
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவதார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவதார்?

உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்கள் அனைத்தும் படைத்தவர் யார்?
பலவும் ஒழுங்காய் முறை பிறழாப்
பாங்கில் இயக்கி வருவது யார்?
அவரே தெய்வம்! பேராற்றல்!
அறிவைக்கொண்டே வணங்கிடுவோம்!
எவரும் அவரின் அருளாலே
இன்பம் பெற்று வாழ்கின்றார்.

குழந்தைகள் ,கடவுளையும், பெற்றோர்களையும் வழிபட வேண்டும் என்றும்,
பாடம் கற்கும் முறை,உணவு உண்ணும் முறை,கூடி விளையாடும் முறை ஆகியவற்றை நன்கு உணரவேண்டும் என்றும்,இயற்கையைக் கண்டு மகிழவேண்டுமென்றும்,நீக்கமற நிறைந்த இறையாற்றலைத் தங்கள் அறிவைக்கொண்டு வணங்க வேண்டுமென்றும் மகரிஷி கூறுகிறார்.இவற்றைப் பின்பற்றிக் குழந்தைகள் வளர்வது நல்லது.

திங்கள், 1 ஜூன், 2009

கிளிக்கோலம்

மார்கழியில் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து


இயற்கை தரிசனம்
எண்ண்மே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிபோகும் . - வேதாத்திரி மகரிஷி